கடந்த திங்களன்று, தென்னிலங்கையிலுள்ள பெலியத்த என்கிற நகரில் விசேட நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது.
272 மில்லியன் டொலர் சீன நிதி உதவியில், பாரிய தொடரூந்து பாதை நிர்மாணிக்கும் திட்டம், சபாநாயகர் சமல் ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப்பணிக்கு பெருத்த மனதோடு உதவிவரும் சீனாவிற்கு, அங்கு புகழாரம் சூட்டப்பட்டது.
ஏற்கனவே, 292 மில்லியன் டொலர் சீனக்கடனில் நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலையை அண்மையில்தான் சனாதிபதி திறந்து வைத்தார். பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தரும் பிரமுகர்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் பெருமை கொள்கிறது. ஆனால், பாதையை நிர்மாணிக்க சீனாவிடம் வாங்கிய கடனிற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் வட்டி செலுத்தப்படும் என்பதனை மறந்து விடக்கூடாது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், அடுத்த ஆண்டிற்கான உத்தேச வரவு- செலவுத்திட்டத்தில் வடமாகாணத்திற்கு வெறும் 17 பில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாணசபைக்கு 15 பில்லியன் ரூபாவுமே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைவிட , ஏறத்தாள 10 மடங்கு நிதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2009 இல் $1.2 பில்லியனையும், 2010 இல் $ 821 மில்லியனையும், 2011இல் $ 784.7 மில்லியனையும் கடனாக இலங்கைக்கு வழங்கியிருக்கும் மக்கள் சீனக் குடியரசிற்கு, வட- கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்வளவு குறைவான தொகையை அரசு ஏன் ஒதுக்கியுள்ளது என்பது குறித்தெல்லாம் கவலை கிடையாது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும், வட-கிழக்கில் வீசப்படும் எறிகணைகளை யார் விநியோகிப்பது என்பதில், ஏனைய வல்லரசுகளோடு போட்டி போட்டது.
யுத்தத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்கும் சீனாவின் நிதி உபயம் மிகப் பெரியது. இருப்பினும் பாரிய $1.3 பில்லியன் சீனக் கடனில் கட்டி முடிக்கப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையம், கடந்த செவ்வாயன்று மீண்டும் தற்காலிகமாக தனது இயக்கத்தை நிறுத்தி விட்டதாக அமைச்சின் உத்தியோகபூர்வ செய்திகள் கூறின.
இதனைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவென்றால், அனேகமாக அடுத்த கட்டப்பணி ஆரம்பிக்க முன்பாக, சீன நிறுவனமொன்று இதன் முழுமையான நிர்வாகத்தினை கையேற்கும் சம்பவம் நிகழ வாய்ப்புண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே.
சீன மூலோபாய நகர்வின் அடுத்த கட்டமே அதுதான். தான் பெரியளவில் முதலீடு செய்த நிறுவனங்களை, அந்த நாடுகள் கையாள முடியாமல் தவிக்கும் போது, அதனை கையகப்படுத்துவதுதான் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலாகுமென எண்ணுகிறேன்.
ஏனெனில் இது ஆரம்பித்த நாளில் இருந்து இற்றைவரை, பழுது பார்க்கவென்று மூடப்பட்ட நாட்கள்தான் அதிகம். இலங்கை மின்சாரசபையின் நட்டக்கணக்கில், (அமெரிக்காவுக்குத் தெரியாமல் !)இறக்குமதியாகும் ஈரான் எண்ணெய்க்கு அடுத்தபடியாக இருப்பது, இந்த ‘லக்விஜய’ வால் வரும் நட்டந்தான்.
இதனையும் தாண்டி, 2015 இல் தலைக்குரிய வருமானத்தை $4000 ஆக உயர்த்த வேண்டுமாயின் இன்னும் பல படிகளை கடக்க வேண்டும் இலங்கை அரசு. அதேவேளை,
வரவு- செலவுத்திட்டத்தின் 47 சதவீதத்தை மூன்று சகோதரர்களின் அமைச்சுக்களும் பங்கு போட்டுக்கொண்டால் நாடு எப்படி முன்னேறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சிப்பது மக்களின் செவிகளில் விழுகிறது.
இதனைப் பார்க்கும், கேட்கும் சனநாயக உரிமைக்கு மட்டும் குறைவில்லை. ஆனால் தட்டிக் கேட்கும் உரிமை எவருக்குமில்லை. இடதுசாரிகளும் ஆட்சியில் இருப்பதால், அவர்கள் நடாத்தும் தொழிற் சங்கங்களும் இணக்கப்பாட்டு அரசியலுக்கு பழக்கப்பட்டுப் போய்விட்டன.
இவைதவிர, இவற்றிக்கு அப்பால் இன்னொரு முக்கிய விடயத்தை, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரக் காற்றினை புதிதாக சுவாசிக்கும் வடமாகாணசபை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது அண்மையில் இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய நில அபகரிப்பு குறித்து தென்னிலங்கை நிலைமையோடு செய்த ஒப்பீடுதான் அந்த விவகாரமாகும்.
அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு தென்னிலங்கை மக்களின் நிலங்களை சுவீகரித்ததாகக் கூறும் வணிகசூரிய , வடக்கில் நிலங்களைச் சுவீகரிப்பது இராணுவ படைத்தளங்களின் விரிவாக்கத்திற்கு என்கிறார்.
படைத்தளங்களை விரிவுபடுத்தினால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடுமென இராணுவப் பேச்சாளர் எண்ணிவிட்டார் போல் தெரிகிறது. படை முகாம்களைக் கடந்து செல்லும் வாகனங்களிடம் கட்டணம் அறவிட்டு, திறைசேரியின் கையிருப்பினை அதிகரிக்கலாமென்று எவராவது அறிவுரை வழங்கியிருப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.
‘இன ரீதியான ஒடுக்குமுறை நிஜம்’ என்பதற்கு, இதைவிட வேறென்ன சான்று தேவை. தேசிய இன நல்லிணக்கம் ,நல்லாட்சி பற்றி சர்வதேச அரங்குகளில் போதிக்கும் அரசு, நடைமுறையில் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதையிட்டு இந்த வல்லாதிக்க நாடுகள் எவையும் பொருட்படுத்துவதில்லை.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில், சிராணி பண்டாரநாயக்காவின் மனித உரிமை பற்றிப் பேசுவார்கள். ஆனால் குந்தியிருந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பூர்வீக இன மக்களின் பிறப்புரிமை குறித்து பேசவே மாட்டார்கள்.
தெற்கில் வீதி அமைப்பதற்கும், வடக்கில் முகாம்களை விஸ்தரிப்பதற்கும் காணிகள் சுவீகரிக்கப்படுவது என்பதானது,
நாட்டின் பிரதான முரண்பாடான ‘ தேசிய இன முரண்பாடு’ என்பதன் இருப்புநிலை குறித்து எவருக்காவது மாக்சிசச் சந்தேகங்கள் வந்தால், வணிகசூரியாவின் இந்த மதிப்பீடே தர்க்கீகப் பதிலாக அமையுமென எண்ணுகிறேன்.
தற்போது, வலிகாமம் வடக்கில் மக்களின் குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு காணிகள் அபகரிப்படுகின்றன.
உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 6382 ஏக்கர் மக்கள் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தலுக்கு முன்பாக பெரும் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் இப்போது நடைபெறும் வீடழிப்புக்கு எதிராக, சர்வேதேச தலைவர்களிடம் முறையிடப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான முறையீடுகளுக்கு என்ன பதில் சர்வதேசத்திடமிருந்து வரும் என்பது, இந்த வாரத்திலேயே நமக்குக் கிடைத்து விட்டது.
அதாவது சென்ற புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் மிசேல்.ஜே.சிசனிடம் , வலிவடக்கு வீடழிப்பு குறித்து முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் முறையிட்டார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாதென சிசன் அம்மையார் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
கொரியத்தூதுவரும் இதே பதிலைத்தான் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் மட்டுமே தம்மாலான உதவிகளைச் செய்ய முடியுமென்று இந்த பொருண்மிய பலம் பொருந்திய நாடுகளின் பிரதிநிதிகள் கூறிச் சென்றுள்ளனர்.
இவர்கள் தமது எல்லைக்கோட்டினைத் தாண்டி வெளியே வரமாட்டார்கள்.
அவர்கள் வருவார்கள், எமக்காகப் போராடுவார்கள், இராசதந்திர நகர்வுகளை நாசூக்காக நகர்த்துவார்கள் என்கிற சிருஷ்டிக்கப்பட்ட கற்பிதங்கள், அமெரிக்க- கொரிய தூதுவர்களின் தலையிடாக் கொள்கையால், அம்பலப்பட்டு நிற்கிறது.
இலங்கை மீதான வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களுக்குள் அகப்படாத விவகாரமாக, ஈழத்தமிழ் மக்களின் நிலஅபகரிப்பு இருப்பதை இவை உணர்த்துகின்றன.
நிலச்சிக்கல், இலங்கையின் உள்நாட்டு விவகாரம், ஒன்றுபட்ட நாட்டின் இறைமை குறித்த விடயம் என்று கூறி அவர்கள் நழுவி விடுவார்கள். அதற்காக அந்த மக்களே போராட வேண்டும்.
இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்