செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)

திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)திரையின்றி அமையாது உலகு (Three inevitable Screens)

2 minutes read

தமிழர்களை இன்று மூன்று திரைகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று நாம் திட்டமிட்டு நேரம் ஒதுக்கித் தேடிச்சென்று பணம் செலவுசெய்து பார்க்கும் திரையரங்கின் பெரிய வெண்திரை.

மற்றொன்று நாம் தேடிச்செல்ல வேண்டாத, நம் வீட்டிற்குள் வீற்றிருந்து நாம் சாப்பிடும் போதும், ஓய்வெடுக்கும் போதும், பிற வேலைகளைச் செய்யும் போதும் நம் அக்கம் பக்கமாக இருந்து நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சிப் பெட்டியின் சிறிய திரை.

இறுதியானது இருபத்து நான்கு மணி நேரமும் நம்மைவிட்டுப் பிரியாத, நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே மாறிப்போய்விட்ட, கழிவறைக்கும் கூடவே வரும் செல்பேசியின் மிகச் சிறிய கையடக்கத் திரை.

திரையரங்கின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதி, மத, பால், வர்க்க வேறுபாடு இன்றி அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று குவித்ததுதான். இந்த ஒன்று குவித்தலின் காரணமாக, சாதிய, மத, வர்க்க முரண்பாடுகள் சில சண்டையாக வெளிப்பட்டதும் உண்டு. ஆனாலும் சமத்துவத்திற்கு வாய்ப்பளிக்கும் இடமாக சினிமாக் கொட்டகை இருந்தது. ஆனால் தொலைக்காட்சி அதிலிருந்து மாறுபட்டு ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனித் தீவாக மாற்றியது. செல்பேசி மேலும் ஒருபடி கீழே சென்று மனிதர்கள் ஒவ்வொருவரையுமே தனித்தனித் தீவாக மாற்றிவிட்டது.

முடிதிருத்தும் சலூன்கள் எல்லாம் ஒரு காலத்தில் அரசியல் பிரச்சாரக் கூடங்களாக இருந்துள்ளதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று அங்கும் தொலைக்காட்சிப் பெட்டி வந்து காத்திருப்போர் எல்லாம் சவமாகிப் போவதைக் காண்கிறோம்.

அன்றைக்கு ஒரு தாய், தன் குழந்தையை, சிறுவர் சிறுமியை, வயதான அப்பத்தா, அம்மாச்சி அல்லது பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்குள், அழும் குழந்தையை சமாதானம் செய்ய அந்த வயதான மனுசிகள் கூறும் கதைகள் என்பவை இன்றைய குழந்தைகள் அல்லது சிறுவர் சிறுமியர் அறியாத ஒன்றாகும்.

அதே போல் அம்மாக்கள் கதை கூறித் தம் பிள்ளைகளைத் தூங்கச் செய்வது என்பதும் இன்று வழக்கொழிந்து விட்டது எனலாம். மேலும், அம்மா கதை சொல்லு என்ற கோரிக்கையை இன்று குழந்தைகள் வைப்பதுமில்லை. எல்லோருக்கும் சேர்த்து இன்று தொலைக்காட்சிப் பெட்டி கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. தாயின், குழந்தையின் தனித்தன்மை என்பவையும், கதை சொல்லியின் பன்முகத்தன்மையும் அழிந்து போய், உலகம் முழுவதும் ஒரே கதை ஒரே குரலில் இன்று கூறப்படுகிறது. உண்மையைக் கூறுவதென்றால், இன்று நம் குழந்தைகளை வளர்ப்பது நாமல்ல, தொலைக்காட்சிப் பெட்டியே!

இப்போதுகூட டி.வி. பெட்டியே வேண்டாம் என்று முடிவெடுத்து நம் வீட்டிலிருந்து தூக்கியெறிந்துவிடவோ, அல்லது இனி வாங்காமல் இருந்து விடவோ வேண்டியதுதானே என்று சிலர் கருதலாம்.

ஆனால் அப்படிச் செய்வது அவ்வளவு எளிதா என்று சிந்தித்துப் பாருங்கள். டி.வி. நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்டது என்று கூறுவதைவிட குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தலைவராகி வெகு காலமாயிற்று என்றே கூற வேண்டும்.

இப்படிக் கூறுவது வியப்பாக இருக்கலாம். உண்மையில் நமது உணவுப் பழக்கத்தை உடையை, இருப்பிடத்தை, கல்வியை, அழகு சாதனங்களை, வீட்டு உபயோகப் பொருட்களை நம் உடல் அமைப்பை, நமது நண்பர்களை, உறவுகளை, விளையாட்டுகளை மட்டுமல்லாமல், நம் கால்நகம் முதல் தலைமயிர் வரையிலானவற்றின் மீதும் ஆதிக்கம் செய்யும் ஒன்றாக, டி.வி. பெட்டி மாறிப்போய்விட்ட பிறகு, குடும்பத் தலைவர் என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவீர்கள்.

இனி டி.வி.யின்றி வாழ்வது எளிதன்று. அதாவது திரையின் தொடர்பின்றி வாழ்வது அவ்வளவு சுலபமன்று. குறிப்பாக எந்த ஓர் மனிதரும் இன்று மூன்று திரைகளில் ஒன்றைக்கூட ஒரு நாளின் 24 மணிநேரத்தில் ஒரு முறைகூடப் பயன்படுத்துவதில்லை என்று கூறிவிட முடியாது.

ஆக, நிலவும் சமூகப் பொருளாதார அரசியலையும், பண்பாட்டையும் மாற்ற விரும்பாதவர்கள்(சி+பெ) திரைகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்ட நிலையில், சமூக மாற்றத்தை விரும்பும் (அம்பேத்கர்-பெரியார்-மார்க்ஸ்) இயக்கத்தினர் மட்டும் தங்களுக்கென்று திரைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது அவலமேயாகும்.

இது எளிதன்று என்றாலும் அவசியமானது என்பதோடு, இன்றைக்கு வேறு வழியே இல்லை என்று கூறவேண்டும். ஏனென்றால் சமூக மாற்ற இயக்கத்தினர் திரைக்கு மாற்றாக இன்றும் எழுத்துகளை மட்டும் நம்பி, அதாவது நிகழ்காலக் கருவிக்கு முன் கடந்த காலக் கருவியோடு நிற்கின்றார்கள்.

முற்போக்கு இயக்கத்தவர் என்போர் வீதியில், வீட்டுக்கு வெளியில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். தோழர்களே! யுத்தம் வேறொரு இடத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பின்றி நம் பெண்களும், குழந்தைகளும் எதிரிகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று திரைகள் மட்டுமே இக்கட்டுரையில் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் நான்காவது திரையான கணினி-இணையத்திரை கவனத்தில் கொள்ளப்படவில்லை. அது பற்றி விரிவாகத் தனியே பார்க்கப்பட வேண்டும். எனவே, மக்களுக்கான மாற்றுத் திரை என்பதே இன்றைக்கு உடனடித் தேவை என்பதை அனைவர்க்கும் கூறுவோம்.

 

 

 

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் | குமரன்தாஸ் | தமிழ் கூடல் இணையம் 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More