பாடசாலை, கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்கள் போலவே புகலிடத்தில் தாம் வாழும்வேளையில், தமது பிரதேசத்தின் பெயரால் அமைப்புகளை உருவாக்கி அதன் வழியாக புலம்பெயர்ந்து வாழும் அப்பிரதேச மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், தாயகத்தில் தம் பிரதேச மக்களுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் உதவிகளை வழங்கவும் என பல்வேறு நோக்கங்களை முன்வைத்து அமைப்புகள் பல உருவாகியுள்ளதை அவதானிக்கலாம்.
அவற்றின் ஆண்டுவிழாக்களிலும், சிறப்பான நிகழ்வுகளிலும் வெளியிடப்படும் மலர்கள் பிரதேச வரலாற்றை பிரதிபலிக்கும் ஆக்கங்களையும் அவ்வப்போது உள்ளடக்குவதையும் காணலாம். இதற்கு உதாரணமாக கொம்பறை: வன்னிவிழா: ஆண்டுமலர்களைக் குறிப்பிடலாம்.
கனடா, வன்னி நலன்புரிச்சங்கம், ஆண்டுதோறும் வெளியிடும் இம்மலரின் சில பிரதிகளே என்கைக்கெட்டியுள்ளன. அதில் ஒன்றாக 1997ம் ஆண்டில் கே.பி.சிவானந்தராஜ் அவர்களைச் செயலாளராகக் கொண்டு வெளிவந்த கொம்பறை: வன்னிவிழா 97 என்ற சிறப்பு மலரை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்கின்றேன். (வன்னிப் பிரதேசத்தில் நெல்மணிகள் சேமித்து வைக்க உபயோகிக்கும் நெற்களஞ்சியம்; “கொம்பறை” எனப்படும்).
பண்டாரவன்னியன் நினைவையொட்டி கனடாவில் வன்னி நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட வன்னி 97 சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்ட இம்மலர், ஆசிச்செய்திகளுடன் வன்னியும் வீர வரலாறும் (இரா.சரோஜினி), வன்னிநாட்டின் பாரம்பரியங்கள் (சிவா சேனாதிராஜா), வன்னிச் சிற்றரசுகளின் சமூகப் பொருளாதார அமைப்புமுறைகள் (பாலா கணபதிப்பிள்ளை), வன்னியியல் சில வரலாற்றுக் குறிப்புகள் (சிலையூரான்), வன்னிநாட்டின் கறைபடிந்த வரலாற்று நாயகர்கள் (முல்லைமணி), காணிநிலம் (அ.பாலமனோகரன்), வளம்கொழிக்கும் வன்னிநாடும் பண்டாரவன்னியனும் (அருணா செல்லத்துரை), வன்னிப்பிரதேச நாட்டார் இலக்கியச் சான்றுகளும் ஈழத்தில் கண்ணகி வழிபாட்டுப் பரவலும் (இ.பாலசுந்தரம்) ஆகிய வன்னியியல் சார்ந்த பல படைப்புக்களை உள்ளடக்கியிருந்தது.
புகலிடத்திலிருந்து வெளிவரும் இன்றைய பிரதேச வரலாற்று நூல்களின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகக் குறித்ததொரு பிரதேசம் சார்ந்த சமூக வரலாற்றுக்கூறுகள் -மலரும் நினைவுகளாக அமைந்தவிடுவதைக் காணலாம்.
யாழ்;ப்பாணத்து மண்வாசனை என்ற நூல் வண்ணைதெய்வம் அவர்களால் பிரான்சிலிருந்து தொகுத்து வெளியிடப்பட்டது. சென்னை, மணிமேகலைப் பிரசுரமாக 2003இல் வெளிவந்தது. இந்நூல் ஈழத்து மண்வாசனையை-மண்ணின் மைந்தர்களின் வழியாகவே வெளிக்கொண்டுவரும் வித்தியாசமான யுக்தி. சுமார் 46 படைப்புக்களின் வாயிலாக, இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர் தமது தாயகமண்; பற்றிய சிறப்பை எண்ணவரிகளாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அறிமுக எழுத்தாளர்களையும், அனுபவ இலக்கியவாதிகளையும் ஒரே தளத்தில் நிறுத்தி வண்ணைதெய்வம் இத்தொகுதியை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவந்துள்ளார். கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என பலவடிவங்களின் வாயிலாகவும் யாழ்ப்பாணத்துப் பிரதேச வரலாற்றுத் தகவல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
பிரதேச வரலாறு பற்றிப் பேசும் நூல்களின் வரிசையில் ஒரு பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவமான அமைவிடம் பற்றிய தனி நூல்களையும் நாம் உள்ளடக்கவேண்டியுள்ளது. ஒரு பிரதேசத்தை முக்கியத்துவமுடையதாக்கும் அப்பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவமானதொரு இடத்தைப் பற்றி எழுதப்படும் இத்தகைய நூல்களும் பிரதேச வரலாற்று நூல்களே. களம்பல கண்ட யாழ். கோட்டை: யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு என்ற நூல், நீலவண்ணன் என்ற புனைபெயரில் செங்கை ஆழியான் க.குணராசா அவர்களால் எழுதப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து அவரது வெளியீட்டகமான கமலம் பதிப்பகத்தின் வாயிலாக 1995இல் வெளியிடப்பட்டது.
இவ்வாய்வின் முதற்பகுதி 8.7.1990 முதல் யாழ்ப்பாணத்தில் முரசொலியில் தொடராக வெளிவந்திருந்தது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இத்தொடர் மேலும் விரிவாக்கப்பட்டு முழுநூலாக வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக்கோட்டையின் உருவாக்கம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் அது விடுவிக்கப்பட்ட செப்டெம்பர் 26, 1990 வரையிலுமான காலவரலாற்றை, போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழயுத்தம்1, ஈழயுத்தம்2 என்ற ஐந்து பகுதிகளில் இந்நூல் பதிவுசெய்கின்றது. (நூலின் அட்டையில் யாழ்ப்பாணக்கோட்டை வரலாறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது).
தொடரும்……
நன்றி : என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் | பதிவுகள் இணையம்