நம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். காலத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.
‘காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடியுங்கள்’ என்று செஸ்டர்பீல்டு பிரபு என்பவர் கூறுகிறார்.
ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும் என்கிறார் விக்டர் ஹியூகோ என்ற அறிஞர்.
ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போது அவர்களின் பைகளில் 24 மணி நேரம் நிரப்பப்படுகின்றது. அந்தக் காலம், பொன் போன்றது.
சாதாரண எழுத்தராக வறுமையின் பிடியில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ஆர்னால்டு பென்னட் என்பவர், தான் ஒரு சிறந்த எழுத்தாளராக ஆகவேண்டும் என்று எண்ணினார். தனக்கு அதற்குரிய தகுதி இருக்கின்றதா என்று ஆராய்ந்தார். காலத்தின் அருமையை உணர்ந்தார். ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் என்பது இயற்கையால் அவருக்கு வழங்கப்பட்ட வரம். காலத்தைச் சரியாக பயன்படுத்திகொள்வதில்தான் ஒருவரின் உயர்வு, தாழ்வு இருக்கிறது என்பதை ஆர்னால்டு பென்னட் நன்கு உணர்ந்தார். ஆகவே ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, எஞ்சியுள்ள நேரத்தைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்தத் துவங்கினார் பென்னட். ஒவ்வொரு செயலையும் அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். திட்டமிட்டபடி தனது செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பதையும், அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைவதையும் இயல்பாக்கிக் கொண்டார்.
காலங்கருதிச் செயல்படும் இந்த அணுகுமுறை ஆர்னால்டு பென்னட்டுக்கு பயனளிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சிந்தனையை வெளிப்படுத்த உதவியது. ஒவ்வொரு நாளும் ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை உருவாகத் தொடங்கியது. அவரது முதல் நாவல் வெளிவந்தது. பலரது கவனத்தையும் கவர்ந்து வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வறுமையுடன் போராட வேண்டியிருந்த எழுத்தர்பணி, காலவெள்ளத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சரியான நோக்கத்துடன் காலத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் எழுத்துலகில் பென்னட்டின் முன்னேற்றம் வளர்ந்தது.
24 மணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தப் பழகியதால் எழுதுவதற்கு மட்டுமன்றி பல்வேறு பயனுள்ள பொழுதுபோக்கு களில் நேரத்தை செலவழிக்கவும் பென்னட்டால் முடிந்தது. ஓவியம் வரைவது, இசை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது, பல நூல்களைப் படிப்பது, நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற அனைத்தும் சாத்தியமாயின. பென்னட்டைச் சந்திக்கும் அனைவரும், எப்படி உங்களால் மட்டும் முடிகின்றது? நேரம் எப்படி கிடைக்கின்றது? என்று கேள்வி கேட்கத் துவங்கினர்.
அந்தக் கேள்விகள் பென்னட்டுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. ஏனென்றால், அனைவருக்கும் சமமாகத்தான் 24 மணி நேரம் அளிக்கப்படுகின்றது. பென்னட் நேரத்தைப் பயன்படுத்திய விதம்தான் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது. இதே உணர்வு அதாவது, காலம் பொன் போன்றது என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சிறப்பான முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பதே உண்மை. ஒவ்வொரு வரும் பணத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பதைப் போல நேரத்தையும் திட்டமிட்டு செலவிடப் பழக வேண்டும். ஒருவகையில் பார்த்தால் காலத்திலிருந்து விளைவதே நிதி. காலத்தைச் சரியாக பயன்படுத்தினால்தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை.
காலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமாகக் கட்டுரை எழுதினால், தான் பெற்ற மகிழ்ச்சியை பலரும் பெறமுடியும் என்று கருதினார் பென்னட். ஒருநாளில் உள்ள 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அவர் கட்டுரை எழுதினார்.
ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம். உண்மையிலேயே சரியாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயம், ஏழை, பணக்காரர், அறிவாளி, கல்வியறிவு இல்லாதவர் என்று அனைவருக்கம் சமமாக அளிக்கப்பட்ட ஒன்றே காலம் என்று பென்னட் விவரித்தார். அதை யாரும் ஒருவரிடம் இருந்து எடுக்க முடியாது. திருடவும் முடியாது. யாராலும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு மேல் விலைகொடுத்தும் வாங்க முடியாது.
காலத்தை சரியாக பயன்படுத்துபவருக்கு போனஸாக இன்னும் ஒரு மணி நேரம் என்று அதிகப்படுத்தி கொடுப்பதில்லை. காலத்தை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு அதற்கு தகுந்த அளவு அடுத்த நாள் காலத்தை குறைப்பதும் இல்லை. எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்துக்குக் கடன் வாங்க முடியாது. இறந்த காலத்தில் மீதம் வைத்து நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வரவும் முடியாது. கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்தான் உடல்நலம், மனஅமைதி, பொருள் ஈட்டுதல், மரியாதை போன்ற அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட நேரத்துக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்து பயன்படுத்துவது என்பது அவரவர் கையில்தான் உள்ளது. வரவுக்குள் செலவு செய்யப் பழகுவது போல காலத்தையும் முழுமையாக, சரியாக பயன்படுத்தப் பழக வேண்டும். பென்னட்டின் இந்தக் கருத்து, பலர் தமது வாழ்க்கைப் பாதையைச் சரிபடுத்திக்கொள்ளப் பெரிதும் உதவியது.
பென்னட்டின் நூல், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் காலத்தின் அருமை கருதிச் செயல்படத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். காலத்தால் நிரப்பப்பட்டதே வாழ்க்கை.
‘கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து’
என்ற வான்புகழ் வள்ளுவனின் குறள்படி, காலத்தை எதிர்பார்க்கவேண்டிய பருவத்தில் கொக்கைப் போல காத்து இருந்து, காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்துவதைப் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் ஒரு விதையே. குறிப்பிட்ட காலத்தில் அதை விதைத்தால்தான் உரிய கால அவகாசத்தில் அது முளைத்துப் பயனை அளிக்கும்.
செயற்கரிய செயல்களை செய்தவர்கள் விதைத்த விதை விருட்சமாகி காலத்தையும் தாண்டி நிற்கிறது. இளைஞர்கள் முதலில் காலத்தின் அருமையை உணர்ந்து பயன்படுத்தப் பழக வேண்டும். எண்ணங்களும், செயல் களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும். அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.
நன்றி : கரை செல்வன் | இன்று ஒரு தகவல்