இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில் எழுதிவிடுவார்கள் போல் தோன்றுகிறது. இவர்கள், அதிகார மோதல் பற்றி விலாவாரியாகப் பேசுகிறார்கள். அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்களின் உப பிரிவுகள் உட்பிரிவுகள் குறித்தெல்லாம் ஆழமாகவும் அகலமாகவும் பேசுகிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையைக் கொண்டு வந்த கட்சி இப்போது படும்பாடு சொல்லி மாளாது. இந்த அதிபர் முறைமையானது, நாடாளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஏக போக உரிமையைக் கொண்டது என்பதனை ஜெயவர்தனாவும் அறிவார் ரணிலும் புரிந்து கொள்வார்.
தாங்கள் உருவாக்கிய ஆப்பில், இவர்களே மாட்டிக் கொண்ட துன்பியல் நிகழ்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மகாசனங்கள் இம் மோதலை வேடிக்கை பார்ப்பதை புரிந்து கொள்ளாத அதிகாரவாசிகள், கட்சி அபிமானிகளை ஒன்றுதிரட்டி தினமொரு போராட்டம் செய்கிறார்கள். ஆனாலும் மக்களும் தங்கள் அடிப்படை உரிமைக்காக, இதே அதிகாராவாசிகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் போராட்டங்களில், அதிகாரத்திற்காகப் போராடும் ஜனநாயகவாதிகளைக் காணவில்லை.
1000 ரூபா சம்பள உயர்வு கோரி, மலையக தமிழ் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு பிரதேசங்களில் மக்கள்திரள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதியை உயர்த்தி நிமிர்த்துவதற்கும், இந்த உழைக்கும் ‘மாமனிதர்கள்’ ஈட்டித்தரும் அமெரிக்க டொலர்களே உதவுகிறது. இவர்களின் உழைப்பினை நம்பியே அனைத்துலக நாணய நிதியமும் , உலக வங்கியும், சர்வதேச கடன்முறி முதலீட்டாளர்களும், பெருமளவு டொலர்களை கடனடிப்படையில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு மீளச் செலுத்தும் முதலும் வட்டியும், இம் மக்களின் உழைப்பினால் உருவானது. மக்கள் ஜனநாயகத்திற்காக போராடுவதாகக் கூறுவோரை, மக்கள் போராட்டங்களில் காணவில்லை. நடைபெறும் நாற்காலிச் சண்டைக்கு என்னதான் ஜனநாயகம் முலாம் பூசினாலும், ‘அதிகாரம் மக்களுக்கானது’ என்பதை ஏற்றுக்கொள்ளாதவரை, இவர்களிடமிருந்து மக்கள் விலகியிருப்பார்கள்.
வடக்கு கிழக்கிலும் இதே நிலைதான். ஒற்றையாட்சிக்கு உட்பட்ட மாகாணசபை அதிகாரங்களில் உள்ள, காணி காவல்துறை உரிமைகளைக்கூட நல்லாட்சி அரசாங்கங்கள் வழங்கவில்லை. அரசியல் யாப்பிலுள்ள காணி காவல்துறை சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அரசிற்கு எதிராக, தற்போது ரணிலின் ‘மீள்’ வருகைக்காக ஆவேசமாகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வழக்கையும் போடவில்லை. காணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்களிலும், இந்த தீவிர தமிழ்த்தேசிய தலைவர்களைக் காணவில்லை.
நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளைவிட, ரணில் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதையே தமது இலட்சியமாகக் கொண்டு கூட்டமைப்பு தொழிற்படுவது போலுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க நாடாளுமன்றம் செல்வதாகச் சொல்லி மக்களின் வாக்குகளை பெற்ற கூட்டமைப்பினர், பெரும்பான்மையின கட்சிகளுக்கிடையே நடக்கும் கதிரைச் சண்டையில் ஒரு தரப்பினர் சார்பில் அணிவகுத்து நிற்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயகம் மறுக்கப்பட்ட தேசியஇனத்தின் உரிமைக்குரலாக இருப்பதை விடுத்து, ஒடுக்கும் அரச தரப்புகளில் எவரிடம் ஜனநாயகம் இல்லை என்கிற விவாதங்களில் ஈடுபடுவதற்கு மக்கள் இவர்களை அனுப்பவில்லை.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்கொண்ட பின்னடைவுகளும், சபை அதிகாரங்களைக் கைப்பற்ற ஏனைய கட்சிகளோடு ஏற்படுத்திய நசிவுப்போக்குகளும், ஒருவகையான தளம்பல் நிலையை உருவாக்கியிருந்தது. இத்தகைய வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முயலும்போது, முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி அரசியல் களத்தில் இறங்கியது. ஆனந்த சங்கரியின் கூட்டணியில் போட்டியிட்ட, ஒரு காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளராகவிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனும் முதல் துண்டைப்போட்டு அவரோடு இணைவதாக விடுத்த அறிவித்தல் கூட்டமைப்பிற்குள் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இவ்வாறாக அரசியல் இருப்பின் சரிவுநிலையை கூட்டமைப்பு எதிர்கொண்ட போது, மகிந்த இராஜபக்ச மீண்டும் பிரதமர் நாற்காலி என்கிற முருங்கை மரத்தில் ஏறுகிறார். கொழும்பு அதிகார மையத்தில் ஏற்பட்ட மோதலில் ரணில் பக்கம் சாய்ந்த கூட்டமைப்பு, மகிந்த ராஜபக்சவின் வருகையை பலத்த விமர்சனத்தோடு எதிர்க்கிறது. தமிழ் மக்கள் மத்தியில் இழந்த ஆதரவினை மீளப்பெறுவதற்கு, இந்த மகிந்த எதிர்ப்பினை கூட்டமைப்பின் தலைவர்கள் கையிலெடுத்தார்கள் என்று நம்பலாம். மகிந்த- பொன்சேக்கா, மகிந்த- மைத்திரி அதிகார மோதலில், மகிந்தவிற்கு எதிராகவே தமிழ் பேசும் மக்களின் கூட்டு உளவியல் செயற்பட்டது என்கிற யதார்த்தத்தை கூட்டமைப்பு உணர்ந்துள்ளது.
ஆகவே தமிழ்த் தேசிய அரசியலில் தமக்கெதிராக புதிதாக உருவாகப்போகும் பலமான அணியினை எதிர்கொள்வதற்கு, மக்களின் மகிந்த எதிர்ப்பு நிலையினை தமதாக்கும் கருமத்தை சிரமேற்கொள்வதே ஒரே தெரிவென்று கூட்டமைப்பு கருதுகிறதென நம்பலாம். இருதரப்பிலும் ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறும் கட்சிகள், அது கூட்டமைப்போ ரணிலோ, தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றினை எதிர்கொள்ள விரும்பவில்லைபோல் தெரிகிறது. ‘சதிக்கு எதிராகவே மகிந்தாவை எதிர்க்கிறோம்’ என்கிற ஜேவிபியும், ‘ரணிலை ஜனாதிபதியாக்குவோம்’ என்று கூறியவாறு பிரதமர் நாற்காலியை குறிவைக்கும் சஜித் பிரேமதாசாவும், கோமா நிலையில் செயலற்று இருக்கும் அரச இயந்திரம் இயங்கினால் போதும் என்று கருதுகிறார்கள். சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவில்லாமல் மகிந்த அணியினரில் எவரும், ஜனாதிபதியாகிவிட முடியாது என்பதனை புரிந்து கொள்ளும் சஜித், அந்த வாய்ப்பு தமக்கே கிடைக்கும் என்று நம்புகிறார். ஆனாலும் இந்தக் கொழும்பு அரசியலிற்கும் மக்களிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதே நிஜம்.
பிரான்சில் நாட்டில், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ‘மஞ்சள் மேலங்கி’ அணிந்தவாறு இளையோர்கள் போராடுகிறார்கள். அந்த அரசும் மக்களின் போராட்டத்தினை எதிர்கொள்ள முடியாமல், விலை அதிகரிப்பினை தள்ளிப் போடுகிறது. இலங்கையிலோ, புள்ளடி போட்ட மக்கள் தமது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் போது, மக்களின் பிரதிநிதிகளோ அம் மக்களிடமிருந்து அந்நியமாகி ஆளுகின்ற வர்க்கமாகிவிடுகிறார்கள்.
இதற்கு தாராண்மைவாத ஜனநாயகம், யதார்த்தவாத அரசியல், திறந்த பொருளாதாரம் என்று என்னென்னமோ மொழிகளை புகுத்திவிடுகிறார்கள். இவையெல்லாம் ‘மக்கள் அதிகாரம்’ என்கிற பெருவெளிக்கு அப்பால் நிற்கும் அதிகாரவாசிகளின் சுயநல மொழி என்பதை எப்போது மக்கள் புரிந்து கொள்வார்கள்?.
அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்