சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர் தமிழர் எனக் காலங்காலமாக மற்றவர் கூறக்கேட்டு நாம் இறுமாந்திருக்கின்றோமேயன்றி அதன் உண்மையை ஒருபோதும் ஆராய விளையவில்லை. திரு சிவகனேசன் என்பவர் தமிழர் தொன்மை பற்றிய ஆய்வில் இறங்கியபோது அவரது சிந்தனையில் இருந்து எனது ஆய்வு அவரது வழிகாட்டலில் ஆரம்பமானது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை நாடோடிகளாகத் திரிந்த மாந்த இனத்தை கூர்ப்படையச் செய்ததே விவசாயம் என்னும் மாபெரும் கண்டுபிடிப்பு.
மெசொபோத்தேமியாவில் விவசாயத்தின் தோற்றம் மனிதனை நாகரிகம் என்னும் பாரிய நகர்வுக்கு இட்டுச்சென்றதுடன் பொறிமுறையாக்கப்பட்ட விவசாயம் சுமேரிய இனத்தை அதி உன்னத அறிவியல் வளர்ச்சிக்கு உந்தித்தள்ளியது. அந்த சுமேரியரின் வழித்தோன்றல்களே நாம் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்றி உலகின் முன் அதை நிறுவவேண்டியவர்களாகவும் உள்ளோம்.
தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகுமுழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது தமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தரஅடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடுஅழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது.
நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டோமானால், நடைமுறைச் சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தைஅடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை. உதாரணமாகக் கல்வி தமிழருக்கு பொதுவான தளமாக இருந்தாலும் கூட அட்சரங்கள், எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விகற்கும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு படித்த முட்டாள்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கற்பித்தல் முறைகளையே நாம் நாடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உலகின் முதல் நாகரிக மாந்தன் எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன் உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும்மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச்சொன்னவனும் தமிழனே என்றால் மிகையாகாது.
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி திசைதிருப்பி குமரிக்கண்டம் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழல விட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. அதற்க்கு சாமரம் வீசிக்கொண்டு தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.
இந்த தொடர் கட்டுரையை நான் எழுதியதன் நோக்கம், உலகில் உன்னதமாய் வாழ்ந்த ஒரு இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்துகிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.
இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்துகொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வரமாட்டார்களா?? என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப்பார். அவர் தம் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா. யாழ் இணையத்தில் வெளிவந்த எனது ஆய்வு இப்போது வணக்கம் லண்டன் இணையத்தில் தொடராக வெளிவர உள்ளது.
தொடர் விரைவில் ஆரம்பமாகும்…..
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து