மெசொப்பொத்தேமியா என்றால் இரு நதிகளுக்கிடையே உள்ள நிலப்பரப்பு என்றுபொருள். மெசொப்பொத்தேமியா என்பது கிரேக்கப் பெயர். சிலோன் என்னும் பெயரும் ஆழிப் பேரலையின் சுனாமி என்னும் ஜப்பானியப் பெயரும் எப்படி உலகில் நிலைத்ததோ அதுபோல் கிரேக்கர்கள் அழைத்த பெயராலேயே அந்நிலமும் பின்நாளில் அழைக்கப்படலாயிற்று. தற்போதைய ஈராக் சிரியா ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கியதே மெசொப்பொத்தேமியா.. இந்நகரம் யூப்பிரட்டீஸ் தைக்கிரிஸ் என்னும் கடல்போல் பரந்துவிரிந்த இரு பெரு நதிகளுக்கிடையே மிகப்பெரும் சமவெளியாகப் பரவிக் கிடந்தது.
உணவு தேடி அலைந்து திரிந்த மக்கள் பெரு மலைகளைக் கடந்து இப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே பசி பொறுக்க முடியாது தானாக விளைந்திருந்த கோதுமையை இவர்கள் உண்ண நேர்ந்திருக்கிறது என டேவிட் நைமன் என்னும் யூத விரிவுரையாளர் கூறுகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆய்வாளருமான சாமுவல் நோவா கிரேமர் என்பவர் மெசொப்பொத்தேமியா பற்றிப் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். இவர் சுமேரியர் பற்றிய ஆய்வுகளுக்காகவே தம்வாழ்நாளைக் கழித்தவர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டபடியால் இவரின் ஆய்வுகள் நூல்களாக மட்டுமே இருக்கின்றன..
கோதுமையும் பார்லியும் மட்டும் விளைந்திருந்த அந்நிலத்தில் பசி போக்க உணவு கிடைத்தவுடன், மனிதர்கள் வசிப்பதற்கேற்ற நல்ல காலநிலையும் இருந்ததனால் அம்மக்கள் கூட்டம் தொடர்ந்தும் அலைந்து திரியாது அவ்விடத்திலேயே தங்கலாயிற்று. காட்டு விலங்குகளின் தொல்லை இல்லை. பசிக்கு உணவுகிடைக்கிறது. இனி அடுத்து என்ன. மக்கள் கூட்டம் பெருகுகிறது.
அதன்பின்அவர்கள் வெயிலிலும் மழையிலும் இருந்து தம்மைக் காக்க குடில்களை அமைக்கின்றனர்.
இரு நதிகளுக்கிடையில் இருந்ததனால் களிமண்ணே எங்கும்காணப்பட்டது. பேரீச்சை மரம் போன்ற சிறிய மரங்களும், கிட்டத்தட்ட எட்டு அடிவரை வளரும் பாரிய புற்களுமே அங்கு இருந்தன. வீடுகளைக் கட்டக்கூடிய பெருமரங்கள் எவையும் அங்கு இருக்கவில்லை. அதனால் புற்களைக் கொண்டே அவர்கள் தம்வாழ்விடங்களை அமைத்தனர். சுமேரிய இனம் பெருகப் பெருக அவர்களுக்கு வேண்டியஉணவை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதனால் அங்கே விவசாயம் என்னும் முதற்படிக்கு அவர்கள் காலெடுத்து வைத்தனர்.
கோதுமை, பார்லி என்பன பெரும்பயிராகவும் காலப்போக்கில் கீரை, பட்டாணிக்கடலை, வெங்காயம், உள்ளி, லீக்ஸ், கடுகு, பேரீச்சம் பழம் போன்றசிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டதால் அவற்றையும் பயிர்செய்தனர். சுமேரியர் ஆடு மாடு பன்றி மரை போன்ற விலங்குகளை மட்டுமே வளர்த்தனர். வேறு விலங்குகள் அங்கு காணப்படவில்லை.
விவசாயம் முதன் முதல் மெசொப்பொத்தேமியாவிலேயே ஆரம்பிக்கபட்டதாக அனைத்து ஆய்வாளர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
விவசாயம் என்றவுடன் ஒன்றிரண்டு மாதங்கள்அல்லது வருடங்களில் அதன் பரிணாமத்தை எட்டியிருக்கும் என எண்ணினால் அது தவறு. முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் ஆற்று நீரை நம்பியே செய்யப்பட்டதாகவும் காலநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிவுற்றபோது காலநிலைஅவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமேரியர் சிறிதுசிறிதாக விவசாயத்தில் முன்னேற்றம் கண்டனர். இயற்கையின் அழிவுகளிலிருந்து பயிர்களைக் காப்பதற்கும், கால நிலைகளுக்கு ஏற்ப பயிரிடுவதையும் அறிந்தனர். அதன் பயனாய் காலம் நேரம் பருவகாலங்கள் வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் போன்றன கண்டு பிடிக்கப்பட்டன.
விவசாயத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயமே மனிதனின் மற்றைய கண்டுபிடிப்புக்களுக்கும் வழிகோலியது எனலாம். மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த எண்பது தொடக்கம் தொண்ணூறு சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டதால் விளைச்சல் பெருகியது. விளைச்சல் பெருக அதிகுறுகிய காலத்தில் மக்கள் தொகையும் பெருகியது.
தொடரும் …
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து
இத்தொடரின் முன்னைய பகுதிகள்..
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/
(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)