ஆர்கிமிடிஸ் என்பவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு கணித மேதை; இவர் வாழ்ந்த காலம் கி.பி.287-212 ஆகும். ஆர்கிமிடிஸ் தமது கோட்பாடுகளை நிரூபிப்பதற்கு, உரிய சோதனைகளை நடத்திப் பார்ப்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
அவர் கண்டுபிடித்த ஆர்கிமிடியன் திருகாணி (Archimedean screw) நீரேற்றும் பயன் பாட்டிற்கு உரியதாக இன்றும் வேளாண் நீர்ப்பாசனத் (irrigation) துறையில் விளங்கி வருகிறது. நெம்புகோல்கள் (levers) மற்றும் கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை, ஆர்கிமிடிஸ்தான் அறிவியல் உலகிற்கு அளித்தார்.
ஆர்கிமிடிசின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூற்ப்படும் ஒரு நிகழ்வு இன்றும் அறிவியல் உலகில் நினைவு கூறப்படுவதாக விளங்கி வருகிறது. குளியலறையல் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தார்; உடனே, “கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்” என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது;
அவ்வுண்மை இதுதான்: “ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு நிகரான நீரை வெளியேற்றுகிறது”.
ஐன்ஸ்டீன் (Einstein):
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பிறந்த ஓர் இயற்பியல் வல்லுநர் (physicist); இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1879-1955 ஆண்டுகளில். இவர் கண்டறிந்த முக்கியமான அறிவியல் கோட்பாடு சார்பியல் கொள்கை (Theory of relativity) என்பதாகும்; இதன் வாயிலாக புகழ் பெற்ற E = mc2 என்னும் ஒரு சமன்பாடு வகுக்கப் பெற்றது. இச்சமன்பாட்டை ஒரு சிலரால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடிந்தது.
இயற்கை, வரலாறு மற்றும் இந்த அண்டத்தின் கட்டமைப்பு (Structure of the universe) போன்றவை பற்றிய பெரும்பாலான நவீனக் கொள்கைகளுக்கு அடிப்படையாக விளங்குவது ஐன்ஸ்டீனின் கொள்கைகளே ஆகும். ஒளியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் செல்லும் பொருட்கள் தொடர்பான விதிகளை அவர் வகுத்தளித்தார்; அவை பற்றிய விளக்கங்களையும் அவர் விவரித்தார். ஐன்ஸ்டீனின் மதிப்பு மிக்க, புகழ் வாய்ந்த அறிவியல் பணியாக விளங்குவது அணுகுண்டு (atom bomb) உருவாக்கத்திற்கான அவரது கண்டுபிடிப்பே ஆகும். நம்முடைய காலத்தில் வாழ்ந்த மாபெரும் அறிவியல் மேதையாக விளங்கியவர் ஐன்ஸ்டீன் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி : டாக்டர்.விஜயராகவன் | நிலாச்சாரல்