முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆகின்ற நிலையில் இலங்கையின் அரசியல் சூழலில் பல்வேறு மாற்றங்களும் அதிரடிகளும் நடக்கின்றன. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் கோத்தபாய ராஜபக்ச. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கடும் போக்குடன் செயற்பட்டதுடன் லட்சக்கணக்கான ஈழ மக்களை இனப்படுகொலையும் செய்தார்.
விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதுடன் பாதி தமிழர்களையும் இந்த நேரத்தில் அழித்துவிட வேண்டும் என்பதும் அவரது நோக்கம் ஆகும். போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகின்ற போதும், புலிகளுக்கு எதிராகவும், போர் வெற்றியை கொண்டாடியும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து அரசியல் செய்வதில் மகிந்த ராஜபக்சவை, கோத்தபாய நன்றாக பின்பற்றுகின்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற நெருப்புப் போட்டி இடம்பெறுகின்றது. ஆரம்பத்தில் தமிழர்களின் ஆதரவு தேவையில்லை என்று கோத்தபாய ராஜபக்ச கூறினார். பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றும் தமிழர்கள் தன்னை கண்டு அச்சமடைய தேவையில்லை என்றும் கருத்துக்களை கூறி வருகின்றார். அண்மையில் யாழில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளை சிறையில் இருந்து விடுவிப்பேன் என்றும் சொன்னார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசி வந்த கோத்தபாய ராஜபக்ச, தற்போது, தனது முகநூல் பிரசாரப் பக்கத்தில் காந்தள் மலருடன் இருக்கும் ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ளார். காந்தள் மலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசிய மலர். தற்போது மாவீரர் நாள் காலம். அக் காலத்தில் இறந்த புலி மாவீரர்களின் நினைவாக காந்தள் மலர்களை துயிலும் இல்லங்களில் மக்கள் வைப்பதுண்டு. இந்த நிலையில்தான் கோத்தபாயவின் ஆதரவு பக்கம் ஒன்றில் இப் படம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் ஆதரவை பெறவும், தமிழ் மக்களின் வாக்குகளை சுருட்டவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இ்த பக்கத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கோத்தபாய தேர்தல் முடிய கூறலாம். இந்த பக்கமும் நீக்கப்படலாம். சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் கோத்தபாய காட்ட முயல்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இதனை கண்டு ஏமாறா மாட்டார்கள். அவர்களுக்கு கோத்தபாயவின் குணம் நன்றாக தெரியும்.
இதைப்போல சஜித் பிரேமதாசாவின் பக்கத்தில் போர்க்குற்ற விசாரணைகளை இரத்து செய்வேன் என்ற கோத்தபாயவின் வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதுவும் தமிழ் மக்களை இலக்கு வைத்த தமிழ் பேஸ்புக் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதுவும் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளுகின்ற பிரசாரம். உண்மையில், போர்க்குற்ற விசாரணை நடத்தவோ, இனப்படுகொலையாளிகளை தண்டிக்கவோ சஜித் தரப்பு உடன்படவில்லை. கூறியுமுள்ளது.
கோத்தபாய தரப்பாக இருந்தாலும் சரி, சஜித் தரப்பாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களை தமது தேர்தல் அரசியலுக்காக கிள்ளுக் கீரைக் களாகவும் கறி வேப்பிலைகளாகவும் பயன்படுத்தப் பார்க்கின்றனர். இவைகளை சுட்டிக் காட்டி பேரம் பேசுகின்ற வேலையை தமிழ் தலமைகள் செய்யாதிருப்பதும் வேதனைக்குரியது. முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளிலேயே இந்தளவு மோசடி அரசியல் நடக்கின்றது என்றால் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது?
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்