தனது இரு மகள்களை கொன்றுவிட்டு 12 ஆண்டுகள் தலைமறைவான டாக்ஸி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எகிப்தியரான யாசர் அப்தெல் சயீத் கடந்த 2008 ஆம் ஆண்டில் தமது மகள்கள் சாரா யாசர் சயீத்(17), மற்றும் அமினா யாசர் சயீத்(18) ஆகியோரை சுட்டுக் கொன்ற மறுநாளே அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் சம்பவத்திற்கு பிறகு அவர் மாயமான நிலையில், 2014 ஆம் ஆண்டு தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீண்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு, டெக்சாஸ் மாகாணம் ஜஸ்டின் பகுதியில் இருந்து உறவினர்கள் இருவருடன் அப்தெல் சயீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 63 வயதாகும் அப்தெல் சயீத் கூடிய விரைவில் டல்லாஸ் கவுண்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்.
சம்பவத்தன்று தமது இரு மகள்களையும் ஹொட்டலில் உணவருந்தலாம் என கூறி அழைத்துச் சென்று, துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு சயீத் தலைமறைவானார்.
அமெரிக்க கலாச்சாரத்தில் தமது மகள்கள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால், தந்தை தங்களை துன்புறுத்தலுக்கு இரையாக்கியதாக மகள்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து அமினா உடனையே இறந்துள்ளார். ஆனால், சாரா இறப்பதற்கு முன்னர் பொலிசாரை தொடர்புகொண்டு தந்தைக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொல்லப்பட்ட இளம்பெண்களின் தாயார், பாட்ரிசியா ஓவன்ஸ், சயீத் கைது செய்யப்பட்டதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார்.
இனிமேல் தமது மகள்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.