இளம் வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொறிமுறையை கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அற்ற மாவட்டமாக கிளிநொச்சியை உருவாக்கும் நோக்குடனான பயணமாக இருக்க வேண்டுமென கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இராகுலன் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் செயலியூடாக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். கிராம உள்ளூர் மக்களை அணுகுவதன்மூலம் அந்த சமூகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கருத்து தெரிவித்தார். குறிப்பாக வீடுகளிலிருந்தே முன்னெடுக்கப்படுவது சிறந்தது எனவும் இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும் ஆலோசனை வழங்கியிருந்தார். கிளிநொச்சி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் கருத்து தெரிவிக்கையில் பாடசாலைகளில் விழிப்புணர்ச்சியை முன்னெடுத்துவருவதாகவும் இங்கு எடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவினை வழங்குவதாகவும், பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை எதிர்காலத்தில் முற்றாக கட்டுப்படுத்தலாம் என நம்பிகையும் தெரிவித்தார்.
போதைப்பொருளின் பாவனையின் பாதகம் பற்றிய தெளிவூட்டலை எவ்வாறு செய்யலாம் எனவும் அதனை என்ன பொறிமுறையில் நடைமுறைப்படுத்தலாம் எனவும் தொடர்ந்து ஆராயப்பட்டது. இதற்காக மூன்று குழுக்களை அமைத்து இந்த விழிப்புணர்ச்சியை முன்னெடுக்கும் திட்டத்தை உளவள வைத்திய நிபுணர் ஜெயராசா தெரிவித்தார், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கருத்துதெரிவிக்கையில் எல்லோரும் இணைந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த கலந்துரையாடலை நெறிப்படுத்தியிருந்தார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்பக்கல்வி பாடசாலை அதிபர் பங்கையற்செல்வன், அதிபர் ஜோயல் பியசீலன், அதிபர் திருமதி ஜெயலஷ்மி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி முத்துக்குமார், வைத்தியர் ஸ்ரீதர், கிளிநொச்சி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் குகராசா, வைத்தியர் சுகந்தன், கண்டாவளை MOH அதிகாரி மற்றும் பலர் கருத்து தெரிவித்தனர். வைத்திய நிபுணர் சதானந்தன் செயலி ஊடாக இலண்டனிலிருந்து தனது கருத்தையும் தெரிவித்தார்.
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை ஆரம்பிக்கப்பட்டு முதல் செயற்திட்டமாக போதைப்பொருள் பாவனைக்கு எதிரான முயற்சி மேற்கொண்டமைக்காக கிளி அரச அதிபர் மற்றும் கிளி வலயக் கல்விப்பணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பேரவையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தமது முழு ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.