யேமனின் ஹவுதி இயக்கத்தை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந் நடவடிக்கை சமாதான பேச்சுவார்த்தைகளை அச்சுறுத்தும் மற்றும் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்ப்பதற்கான முயற்சிகளை சிக்கலாக்கும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்த மூன்று வட்டாரங்கள், இராஜதந்திரிகள் மற்றும் உதவி குழுக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் திகதி டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து பொறுப்புக்களை ஏற்கத் தயாராகி வரும் நிலையில் விரைவில் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத தடுப்புபட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்திய வாரங்களில் ஈரான் தொடர்பான பொருளாதாரத் தடைகளை குவித்து வருகிறது.
சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி 2015 இல் யேமனில் தலையிட்டு, ஹவுத்தி குழுவை எதிர்த்துப் போராடும் அரசாங்கப் படைகளுக்கு ஆதரவளித்தது.
பொருளாதார மற்றும் நாணய சரிவு மற்றும் கொவிட்-19 தொற்றுநோயால் நாட்டின் நெருக்கடிகள் மோசமடைந்து வருவதால் ஐ.நா. அதிகாரிகள் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை யேமனை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி மிக்க நாடு என்று விவரிக்கிறது. அங்கு 80 சதவீத மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதாகவும், உதவி வழங்க அதிக பணம் தேவைப்படுவதாகவும் ஐ.நா. உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அன்சார் அல்லாஹ் என்றும் அழைக்கப்படும் ஹவுதி குழு, வடக்கு யேமனில் உள்ள உண்மையான அதிகாரமாகும், மேலும் உதவி வழங்க தொண்டு நிறுவனங்கள் அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மற்றும் ஹோடைடா துறைமுகம் வழியாக உதவித் தொழிலாளர்கள் மற்றும் பொருட்கள் வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.