செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய போது பதிவு செய்த வீடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அட்லஸ் ரொக்கெட் மூலம் பெர்சிவரன்ஸ் ரோவரை விண்ணில் நாசா ஏவியது.
விண்வெளியில் சுமார் 470 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் பயணித்து, மணிக்கு 19,000 கிலோ மீற்றர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த பெர்சிவரன்ஸ், கடந்த 18 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் தனது பணியை பெர்சிவரன்ஸ் ரோவர் தொடங்கியுள்ள நிலையில், பெர்சிவரன்ஸ் தரையிறங்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள மூன்று நிமிட வீடியோவில், பெர்சிவரன்ஸ் தரையிறங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆடியோவில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காற்று வீசும் சத்தமும் பதிவாகியுள்ளது.
பெர்சிவரன்ஸ் ரோவரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் உதவியுடன் இந்த வீடியோ மற்றும் ஆடியோ பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.