தமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்? இவ்வாறு சிலர் கேட்பதும், வீட்டில் சாதாரணமாக பேசும் தமிழை வைத்து”தமிழ் பிள்ளைக்கு தெரியும் ” என்று பெற்றோர் அலட்சியமாக இருந்துவிடுவதன் விளைவு நாளடைவில் வீட்டில் அவர்கள் நாளாந்தம் பயன்படுத்தாத தமிழ் வார்த்தைகளை புரிந்து கொள்ளாமல் போகும்போது பிள்ளைகள் பெற்றோரிடத்தில் பேசுவதை குறைப்பதும் , மொழியால் தம் உறவினர்களிடம் பேசுவதை விரும்பாமல் விலகி நிற்பதோடு காலப் போக்கில் மொழியால் இனத்திலிருந்து விலகிச் செல்லும் இளம் சமுதாயம் ஒன்று உருவாகி வருவதை பார்க்க முடிகிறது,
இரண்டாம் மொழியாக தமிழை கொண்ட தமிழ் பிள்ளைகள் மத்தியில் இன்னிலை மெல்ல உருவாகுவதை காணமுடிகிறது.
இதில் இருந்து நம் பிள்ளைகளை /இளம் சமுதாயத்தை காப்பாற்ற
பெற்றோர்கள் தமிழ் மொழிமீதான அவசியத்தை பிள்ளைகளிடம் வலியுறுத்துவது அவசியமாகிறது.
பிள்ளைகளிடம் எதை வலியுறுத்துவது ?
தமிழ்மொழியை ஏன் கற்க வேண்டும் என்ற வினாவிற்கான விடை காணுவதும்,
இதற்கான விடையை இளம் சமுதாயத்திடம் எடுத்துச் கூறுவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
*அது நம் கடமை! அது நமது தாய் மொழியல்லவா?
*நம் முன்னோர்களின் அறிவு, நாகரீகம், பண்பாடு, அரசியல், போர்,சமயம், மருத்துவம், வான நூல், கணிதம்,கலை, வரலாறு, வாழ்க்கை முறை, சமூகப் பழக்கவழக்கம், விழாக்கள், அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
*அதனால் ஒரு பெருமிதம் உண்டாகும். இவ்வளவு சிறந்த முன்னோர் வயிற்றில் பிறந்தவர்களா இன்றைக்கு இப்படியிருக்கிறார்கள் என்ற கழிவிரக்கம் தோன்றும்; அது, பழமையைக் காட்டிலும் எம் தமிழினம் உலகில் உயர வேண்டும், வளர வேண்டும் என்ற வேகத்தையும் விவேகத்தையும் கொடுக்கும்.
- நம் அன்றாடக் காரியங்களைத் தவறு நேராமல் நிறைவேற்றிக் கொள்ளத் தமிழ் அவசியம்.
*நம் மொழியில் உள்ளதுபோல் நீதி நூல்களும், இலக்கியங்களும், ஆன்மிக நூல்களும் பிற உலக மொழிகளில் இல்லை! அவை நம் செயல்களைச் செம்மைப் படுத்தும்; வாழ்க்கையை நெறிப்படுத்தும்; மனதைப் பக்குவப் படுத்தும்.
*உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத மூலிகை (சித்த) வைத்தியம், மூச்சுக் கலை, இரசவாதம், முத்திரைகள், யோகப் பயிற்சிகள் எல்லாம் தமிழில்தான் காணக் கிடக்கின்றன.
எனவே பெற்றோரா கிய நாம் தமிழ் மொழியின் அவசியத்தை உணர்ந்து பிள்ளைகளிடம் தமிழை கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருக்குமான கடமை .
மொழியைக்கற்று தமிழ் மொழி அழிந்து விடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியினர் நம்மிடம் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதற்கு தமிழ் பாடசாலைகள் பெரிதும்
துணை புரிகின்றன என்பதை உணர்ந்து செயற்படுவது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகும்.
கலையரசி துறைவன்