கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நம்முடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக முகக்கவசம் மாறியுள்ளது. அவ்வப்போது வித்தியாசமான முகக்கவசங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முகக்கவசம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. முகக்கவசம் என்று சொல்வதை விட மூக்கு கவசம் என சொல்வது பொருத்தமாக இருக்கும்.
இந்த மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த புதிய வகையான மூக்கு கவசத்திற்கு ‘கோஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு என பொருள் தரும் ‘கோ’ என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இந்த மூக்கு கவசத்திற்கு கோஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்து கொண்டு பல சாதாரண செயல்களைச் செய்வதும் சிரமமான ஒன்றாக மாறி உள்ளது. குறிப்பாக சாப்பிடும் போது, அருந்தும்போது என முகக்கவசத்தைக் அடிக்கடி கழற்றி வைக்க நேரிடுகிறது. அடிக்கடி கழற்றி வைப்பதால் முகக்கவசத்தில் கிருமி பரவும் வாய்ப்பு கூட உள்ளது.
எனவே தான் சாப்பிடும்போது மற்றும் அருந்தும்போது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு சாப்பிட வசதியாக இந்த மூக்கு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.