கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் பின்வாங்கிய நிலையில் ரஷ்யா நடத்திய பதில் தாக்குதலை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரான கார்கிவில் உள்ள நீர் வசதிகள் மற்றும் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது வேண்டுமென்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களுக்கு வெளிச்சம் மற்றும் வெப்பத்தை இல்லாமல் செய்வதற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தில் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகள் உட்பட சுமார் ஒன்பது மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
உக்ரைன் படை வார இறுதியில் நடத்திய பதில் தாக்குதல்களில் நாட்டின் கிழக்கு பகுதியில் 3,000க்கும் அதிகமான சதுர கிலோமீற்ற நிலத்தை ரஷ்யாவிடம் இருந்து மீட்டதாக செய்தி வெளியான நிலையிலேயே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.