சிகரெட் ஒவ்வொன்றிலும் சுகாதார எச்சரிக்கை அச்சிடப்படும் என்று கனடா நாட்டின் மனநலம், போதைப்பொருள் ஒழிப்புத் துறை அமைச்சர் கெரலின் பென்னெட் (Carolyn Bennett) தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை மேற்கொள்ளும் முதல் நாடாகக் கனடா திகழ்கிறது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க இந்தப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஆண்டுக்கு சுமார் 48,000 பேர் புகைப்பிடிப்பதால் மரணமடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார எச்சரிக்கைகளும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சித்திரிக்கும் படங்களும் சிகரெட் பெட்டியிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் காணப்படும்.
இதனால் சிகரெட் பெட்டியை வீசிவிட்டாலும் சிகரெட்டில் உள்ள சித்திரிப்பு புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அமையும் என்று நம்புவதாக, கனடா நாட்டின் மனநலம், போதைப்பொருள் ஒழிப்புத் துறை அமைச்சர் கெரலின் பென்னெட் மேலும் தெரிவித்துள்ளார்.