பிரான்ஸ் – அன்னேசியில் உள்ள பூங்காவில் இன்று (08) காலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த குழந்தைகளில் 22 மாத வயதுடைய குழந்தையும் இரு பெரியவர்களும் அடங்குவதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகளில் இங்கிலாந்து குழந்தை ஒன்றும் உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
“சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மிக விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்” என பிரான்ஸ், Haute-Savoie மாகாணம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், ஸ்வீடனில் அகதி அந்தஸ்தைப் பெற்ற சிரிய நாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
குற்றப்பின்னணி இல்லை
இதேவேளை, சந்தேகநபர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸிலும் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபரிடம் குற்றப்பின்னணி அல்லது மனநல பதிவு எதுவும் இல்லை என்றும் சந்தேக நபர் பற்றிய கூடுதல் விவரங்களை பிரான்ஸ் பிரதமர் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கத்தியால் குத்திய நபர் தப்பியோட முற்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.