விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவான ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு, இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என ட்விட்டர் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2020-2021ஆம் ஆண்டு காலப்பகுதியில், வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின்னர் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மேற்படி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு ஜாக் டோர்சி அளித்த பேட்டியில் “இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், இந்தியாவிலுள்ள ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக் கூறி அதைச் செய்தார்களும் கூட; அத்துடன், ட்விட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன.
“இந்தியாவில் டுவிட்டரை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லப்பட்டது. ஆம், இவையெல்லாம் நடந்தது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் தான்” என்று அவர் கூறியுள்ளார்.