ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு, இந்த நிலநடுக்கம் உருவானது.
இதனால் அந்நாட்டின் தலைநகர் ரபாத், காசா பிளாங்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
மராகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.
இந்த நிலநடுக்கம் நள்ளிரவில் ஏற்பட்டதால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். இதுவரை அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியது. 2 ஆயிரத்து 59 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது. மலைப்பகுதிகளில் வீதிகள் சேதம் அடைந்திருப்பதால் மீட்பு படையினர் அங்கு செல்வது பெரும் சவாலாக உள்ளது.
மேலும் பல வீடுகள் விரிசலடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே, அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் தங்களது வீடுகளில் தங்குவதற்கு பயந்து வீதிகளிலேயே தஞ்சமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரைக்கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையால் மொராக்கோவுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, மனிதாபிமான அடிப்படையில் தற்போது தனது வான்வெளியை பயன்படுத்த மொராக்கோவுக்கு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.