சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அங்கு ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடை நிலை ஆசிரியர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சங்கங்களை சேர்ந்த சுமார் 600 ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால் பழைய டி.பி.ஐ. வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக 108 அம்பியுலன் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மேலும் 21 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள். இன்று காலை வரை 30 பேர் மயங்கி விழுந்தபோதிலும் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.