ஆச்சி மனோரமாவை போல் சினிமாவில் சாதிக்க வந்த ஒரு காமெடி நடிகை.
கோயம்புத்தூரில் ஏப்ரல் 7ம் தேதி 1962ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரன் உள்ளனர். ஆரம்ப வாழ்க்கை நல்ல பேச்சுத் திறமை கொண்ட கோவை சரளா ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
அவருடைய திறமைகளைப் பற்றி அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார்.
அவரை முன்மாதிரியாகக் கொண்ட கோவை சரளா மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தானாகவே வளர்த்துக் கொண்டார்.
திரைப்பயணம்
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த கோவை சரளாவிற்கு பாக்யராஜ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
அவரது பேச்சு மற்றும் நடிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ், 1983ம் ஆண்டு திரைக்கதை எழுதி நடிக்க முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவை அறிமுகம் செய்தார்.
அப்படம் நல்ல பெயர் வாங்கிகொடுக்க அடுத்தடுத்து, வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘வசந்த ராகம்’ (1986), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘பாண்டிநாட்டுத் தங்கம்’ (1989), ‘சோலைக் குயில்’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘மை டியர் மார்த்தாண்டன்’ (1990), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1990), ‘சின்னவர்’ (1992), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘எங்களுக்கும் காலம் வரும்’ (1992), ‘மகளிர்க்காக’ (1994), ‘காதலா காதலா’ (1998), ‘பாட்டாளி’ (1999), ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ (1999), ‘பட்ஜெட் பத்மநாபன்’ (2000), ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ (2000), ‘ஷாஜஹான்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ (2001), ‘என்னமா கண்ணு’ (2002), ‘கோவை பிரதர்ஸ்’ (2006), ‘உளியின் ஓசை’ (2007), எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
இடையில் சில வருடங்களுக்கு பின் நடிக்க வந்த கோவை சரளா இப்போதும் அதே வேகத்துடன் படங்கள் நடிக்கிறார்.
தொலைக்காட்சி
பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது கோவை சரளா சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.
பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார்.
திருமணம்
நடிகை கோவை சரளா அவர்கள் இன்றுவரை யாரையுமே திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.
மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.
விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.
மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவை நாயகியாக திகழும் கோவை சரளா இனியும் நிறைய பட வாய்ப்புகள் பெற்று நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி : சினிஉலகம்