சிவாஜி கணேசனை வைத்து சுமார் 16 திரைப்படங்கள் தயாரித்தவர் கே பாலாஜி. சிவாஜிக்கும், பாலாஜிக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு இருந்தது. அறுபதுகளின் தொடக்கத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி அறிமுகம் ஏற்பட்டது. பாலாஜிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க சிவாஜி கணேசன் சிபாரிசு செய்தார். சிவாஜி உடன் அவர் இணைந்து நடித்த பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதும் உட்பட பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து பாலாஜிக்கு வாய்ப்புகளை பெற்றுத் தந்தன.
சிவாஜியை கதாநாயகனாகி ஏசி திருலோக சந்தர் இயக்கத்தில் தங்கை படத்தை பாலாஜி முதலில் தயாரித்தார். இதில் கே ஆர் விஜயா நாயகியாக நடித்தார். வித்தியாசமான கதையமைப்புடன் வெளியான தங்கை 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 1967 ஆரம்பத்தில் வெளியான தங்கையை அடுத்து, 1967 செப்டம்பரில் சிவாஜி, சரோஜாதேவி நடிப்பில் என் தம்பி படத்தை கே பாலாஜி தொடங்கினார்.
இதில் சிவாஜியின் தம்பியாக உணர்ச்சிகரமான வேடம் ஒன்றில் பாலாஜி தோன்றினார். அண்ணன் தம்பி பாசத்தை புதியதொரு கோணத்தில் சொன்ன என் தம்பி 1968 ஜூன் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை அடுத்து தனது முதல் பட ஜோடியான சிவாஜி கணேசன், கே ஆர் விஜயாவை வைத்து பாலாஜி திருடன் படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இதில் வில்லனாக அவர் நடிக்கவும் செய்தார். 1969 ல் வெளியான திருடன் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை பெற்றது. இந்த மூன்று திரைப்படங்களையும் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வெற்றிப்படங்கள்
கே பாலாஜி தயாரித்த இம்மூன்றும் கருப்பு வெள்ளை திரைப்படங்கள். வண்ணப் படம் தயாரிக்க விரும்பிய கே பாலாஜி சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில் எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுத்தார். 1971 இல் வெளியான இந்தப் படம் வழக்கம்போல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 1972ல் மீண்டும் அதே ஜோடியை வைத்து ராஜா படத்தை தயாரித்தார். அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்படி வெற்றி கூட்டணியாக திகழ்ந்த கே பாலாஜி – சிவாஜிகணேசன் இணை 1974 இல் என் மகன் படத்தில் தோல்வி கண்டது. அதையடுத்து வெளியான உனக்காக நான் படமும் சுமாராகவே போனது. தொடர்ந்து இரு திரைப்படங்கள் சுமாராகப் போனதால் கே பாலாஜி மனமுடைந்து போனார். எப்படியும் வெற்றிப்படம் கொடுத்தாக வேண்டும் என்ற முனைப்பில் அவர் பெரும் தொகை கொடுத்து வேற்று மொழி படத்தின் உரிமையை வாங்கி தீபம் திரைப்படத்தை எடுத்தார்.
சிவாஜி கணேசன் விரும்பும் பெண்ணை அவரது தம்பி விடும்புவதை அறிந்து அவளை விட்டுத் தரும் கதாபாத்திரத்தில் நடித்த தீபம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் எம்ஜிஆரின் மீனவ நண்பன் படத்துடன் போட்டிப் போட்டு அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி வேற்றுமொழியில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் தயாரித்தார். அதனால், அவர் தயாரித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும்பாலும் சோடை போனதில்லை. அவரது தயாரிப்பில் சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்த திருடன் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அட்ரஸ்டவந்துலு படத்தின் தமிழ் தழுவல்.
இதில் அக்னியேனி நாகேஸ்வரராவ், ஜெயலலிதா நடித்திருந்தனர். வி.மதுசூதன ராவ் திரைக்கதை எழுதி, இயக்க, ஆச்சார்யா ஆத்ரேயா வசனத்தை எழுதியிருந்தார். இந்தப் படம் தமிழில் திருடன் என்ற பெயரில் எடுக்கப்பட்டதற்கு அடுத்த வருடம் இந்தியில் ஹிம்மத் என்ற பெயரில் எடுக்கப்பட்டது.
அட்ரஸ்டவந்துலு திரைப்படமும் ஒரிஜினல் கிடையாது. ஹாலிவுட்டில் 1965 இல் வெளியான ஒன்ஸ் ஏ தீஃப் படத்தின் தழுவல். ரால்ப் நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் அலைன் டெலன், ஆன் மார்க்ரட் ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். திருடனான ஹீரோ மனைவியுடன் திருந்தி புதியதொரு வாழ்க்கை வாழ்கிறான்.
அவன் மீது வன்மம் கொண்ட போலீஸ் அதிகாரி திருந்திய திருடனை மீண்டும் அதே படுகுழிக்கு இழுத்து வர செய்யும் முயற்சியும், தடைகளைக் கடந்து திருடன் திருந்திய வாழ்க்கைக்கு திரும்புவதும் கதை. இதனையொட்டி தெலுங்குப் படத்தை எடுத்திருந்தனர். அதனை சிவாஜி தனது நடிப்பால் தமிழில் ஜமாய்த்திருந்தார். படமும் 100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. சிவாஜி – கே பாலாஜி கூட்டணியின் முதல் ஹாட்ரிக் வெற்றி இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : tamil.news18