செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சலங்கை ஒலி – கமல் என்ற மகா நடிகனின் நாட்டியம்

சலங்கை ஒலி – கமல் என்ற மகா நடிகனின் நாட்டியம்

5 minutes read

கமல் என்ற மகா நடிகனின் நாட்டியம்…. மெய் சிலிர்க்க வைத்தது. நடிப்பு… உயிர் சிதைக்க வைத்தது.

இப்படிப்பட்ட நடிகன் இன்று அரசியல் என்று தத்து பித்தது உளறலோடு வலம் வருவதை காண சகியாத மனநிலையை இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன். படம் தெலுங்கு படம்தான். தமிழில் டப் செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவே… ஆழ் மனதை போட்டு அசைத்து பிசைந்து அடியோடு சாகடித்து விடுகிறது. நல்ல கலைஞன் எல்லாருமே சாகத்தான் வேண்டுமா என்றால்.. வாழ வழியில்லாத நாட்டில் சாவது தானே முறை.

பாலு…. ஒரு நடன கலைஞன். அவனுக்கு எல்லாமே ஆட்டம் தான். ஆனால் அவனுக்கான மேடை கிடைப்பதில்லை. கலைகளின் ஆசி இருந்தும் லெளகீக வாழ்விற்கான பணம் அவனிடம் இல்லை. சமையல் வேலை செய்யும் அம்மாவின் மகன் அவன். சமையல் வேலைக்கு வந்த திருமண விழாவில் நடக்கும் நாட்டியத்தை………வந்த கூட்டம் காண்கிறது. சமையல்கட்டில் பாலு ஆடும் நாட்டியத்தை அவன் தாயோடு சேர்ந்து நாம் காண்கிறோம். நம்மோடு சேர்ந்து மாதவியும் காண்கிறாள்.

மாதவி.. தேவதை மனுஷி.

அவளுக்கு திருமணம் ஆகி மூன்று நாட்களில் பணப் பிரச்சனையில் கணவனிடமிருந்து பிரிந்து வந்தவள். அது கதையின் இடைவேளை சமயத்தில் தான் வெளிப்படுகிறது. அதுவரை மாதவி ஒரு போட்டோகிராபர்…ஒரு ஆர்டிகிள் ரைட்டர் என்று தான் பாலுக்கு அறிமுகமாகிறாள். நமக்கும் அப்படிதான் காட்டப்படுகிறது. பாலுவுக்கு போட்டோ பிடித்துக் கொடுத்து உதவி செய்கிறாள். அவனைப் பற்றிய ஆர்ட்டிகளை எழுதுகிறாள். எல்லாவற்றையும் தாண்டி அவனுக்கு டெல்லியில் ஆடுவதற்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தருகிறாள். அதற்கான இன்விடேஷனை அவனிடம் சர்ப்ரைஸாக தருகிறாள். எல்லாவற்றுக்கும் பூக்கள் பூக்கும் புன்னகையைக் சூடிக் கொண்டவள் அவள். அவன் பிரித்து பார்த்துக்கொண்டே வந்து இறுதியில் தன் பெயரும் இருப்பதை பார்த்து விட்டு என்ன செய்வதென்று புரியாத உணர்ச்சி வயப்பட்ட நிலையில்….அழுதபடி மாதவியின் கைகளில் நன்றிக்கடனாக முத்தமிடுகிறான். மாதவி முதல் முறை தாயாகிறாள். முன்னமே தோழியாகி இருந்தாள். பின்னொரு நேரத்தில் காதலியாகவும் ஆகிறாள்.

காதல் என்றால்… காதல் அல்ல அது. அது ஆராதனை.

அவளை மனதுக்குள் சுமந்து கொண்டே திரியும் கங்காரு மனிதனாக மாறும் பாலுவை நடன உலகம் கை விடுகிறது. நல்ல கலைஞர்கள் இடத்தையெல்லாம் மொக்கை கலைஞர்கள் பிடித்துக் கொள்வது காலம் காலமாக நடந்து கொண்டு வருவது தானே. ஒரு மொக்கை புத்தகம் போட்டு விட்ட பெண்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை திரும்பும் பக்கமெல்லாம் எழுதிக் குவிக்கும் என்னைப் போன்றோருக்கு இந்த கலைஞர்கள் உலகம் தருவதில்லையே. இதே கோவையைச் சேர்ந்த ஒரு இலக்கிய சங்கம்….கோவையை சார்ந்த எழுத்தாளர்களுக்கு தரும் விருது பட்டியலில் கவனமாக என் பெயரை ஒதுக்கியது எல்லாம் இந்த மாதிரி சேர்த்தி தானே. ஒருவேளை நான் ஆப்ரிக்காவில் இருக்கிறானோ என்னவோ…!

சரி….சுய புராணம் எதற்கு.. பாலு புராணத்துக்கு வருகிறேன்.

டெல்லிக்கு போக முடியாத சூழலை பாலுவின் அம்மாவின் மரணம் நிகழ்த்துகிறது. சாகும் தருவாயில் இருக்கும் அம்மா முன் ஆடிக் காட்டும் பாலுவின் உடலில் எல்லா பக்கமிருந்தும் கண்ணீர் ததும்புவதை இந்த ஊர் கலைஞனாக இனம் புரியாத இயலாமையோடு தான் காண முடிந்தது. தன் பிள்ளை நாட்டியத்தில் பெரிய ஆளாக வருவான் என்ற ஆசையோடே வாழ்ந்த அந்த அம்மா அதே ஆசையோடு மரித்துப் போகிறாள். கலைஞர்களின் தோல்வி கலைஞர்களை மட்டுமல்ல…. அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களையும் கலங்கடித்துக் கொண்டே இருக்கிறது ஒரு காலத்தின் கட்டளையாக. புரிந்த மனதோடு உயிர் நடுங்க சொல்கிறேன். இந்தக் கதை மிக நெருக்கமாக எனக்கு பட்டது. மிக நெருக்கத்தில் வழியும் கண்ணீர் துளியின் உவர்ப்பை உணர முடிந்தது.

“மௌனமான நேரம்……மனதில் என்ன பாரம்……” பாடலில்… மாதவியின் தாபமும் காதலும் மெல்ல வெளிப்படுகிறது. அவள் குளிக்கையில் இரு கைகளுக்கிடையில் உருகும் சோப்பைப் போல அவளின் மனமும் பாலுவுக்காக உருகத் துவங்குகிறது. இசை தென்றலாய் அவள் கூந்தல் ஒதுக்குகையில்….தனிமையின் நிறம் காதலின் கரம் தேடுகிறது.

“சில்லுனு ஒரு காதல்” படத்தில் காதல் தோல்விக்கு பின் சூர்யா பைக்கில் அங்கும் இங்கும் அலைந்து முட்டி மோதி கீழே விழுந்து தாப கோபத்தைத் தணிக்கும் காட்சி பார்த்திருப்பீர்கள். அதற்கு முன்னோடியாக ஓரிடத்தில்…… எல்லாம் கை விட்ட நிலையில் கடற்கரையில் பாலு தனக்கு தானே சுய கழிவிரக்கத்தோடு ஆடும் ஆட்டம்.. அசுரத்தனம். அங்கும் இங்கும் ஆடி ஓடி களைத்து பாறையில் ஓய்ந்த அலையாக அமர்கையில் தூரத்தில் இருந்து காதலை சொல்ல வேகமாய் ஓடி வருகிறாள் மாதவி. காதலின் ஐந்தரையடி கடற்கரை காற்று விலக்கி ஓடி வருவது……காட்சியில் கவிதை.

ஆனால்… விதி இட்ட புள்ளியில் நிற்க வேண்டி இருக்கிறது வாழ்வு. விட்டு போன கணவன் அங்கே காத்திருக்கிறான். சத்தமில்லாத அலையை ஸ்தம்பித்து பார்க்கிறது கடல்.

மூன்று புள்ளிகளின் காதலை தஸ்தயேவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நமக்கு சொல்லி இருக்கிறது. இந்தக் கதை கூட அதன் சாராம்சத்தில் கட்டப் பட்ட வேறு திரைக்கதை தான். hats off திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குனர் K.விஸ்வநாத் அவர்களுக்கு. இவர் யார் என்றால்…..” யாரடி நீ மோஹினி” படத்தில் நயன்தாராவுக்கு தாத்தாவாக வருவாரே….அவர் தான். மனுஷன் என்ன உயிர்ப்பான ஆளாக இருந்திருக்கிறார். காட்சிக்கு காட்சி கதற விடும் உணர்ச்சி பொங்கும் பூர்ணத்துவங்கள். விடுபடாத இடைவெளிகளில் நித்திய தாண்டவங்கள்…..பிரிவுகளின் நுட்பத்தில் கட்டப் படும் நம்பிக்கையின் வாழ்வியங்கள்.

பாலுவின் நண்பன் ரகு… காலம் முழுக்கு பாலுவோடு தான் இருக்கிறான். ரகு ஒரு கவிஞன். அவனுக்காக பாலு பத்திரிகை அலுவலகத்தில் சண்டையிடும் முதல் காட்சியிலேயே அவர்களுக்கான நட்பு விளங்கி விடுகிறது. ஒரு பக்கம் நடனம்…… ஒரு பக்கம் நண்பன்…… ஒரு பக்கம் காதலி….. ஒரு பக்கம் அந்த கணவன்……. எல்லாருமே நல்லவர்களாக இருக்கும் இடத்தில்…. அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது. மாதவியை கணவனோடு வழி அனுப்பி வைக்கிறான் பாலு. பாலு வார்த்தைக்கு கட்டுப்பட்ட காதல் மாதவியிடம் இருக்கிறது. ஒரு முக்கோண அன்பு பரஸ்பரம் தன்னை நிரூபித்துக் கொள்கிறது. அன்பினால் கட்டமைக்கட்ட இவ்வாழ்வின் பிரியங்களை பிரிவதும் பேரன்பே.

நடனமும் அற்ற நங்கையும் அற்ற பாலு அதன் பிறகு குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அவனுக்கே அது பிடிப்பதில்லை. ஆனாலும்…. அவனுக்கு வேறு வழி இல்லை. எல்லா வழிகளிலும் மாதவியே நிற்கிறாள். தனக்காக ஏற்படுத்திக் கொண்ட அவள் நினைப்புக்கான தனிமை மதுவிடம் தஞ்சம் அடைகிறது. நண்பன் ரகு எவ்ளோ திட்டியும்……சொல்லியும்… பாலு கேட்பதில்லை. சரி இது தான் உன் விதி என்றால்… அங்கும் உன்னோடு இருக்கிறேன்… என்று ரகு அவனுக்கு ஆதரவாக அப்போதும் இருக்கிறான். ஒருபோதும் அவன் அவன் கையை விட்டு விலகுவதில்லை.

“இன்னைக்கு கிருஷ்ணர் ஜெயந்தி. நான் குடிச்சிருக்கேன். குழந்தை கால் அச்சு போட்ருக்க வழியா நான் வரல…நான் வெளியவே இருக்கேன்…” என்று நண்பன் ரகுவிடம் சொல்லி விட்டு வாலில் குத்த வைத்து பாலு அமரும் இடம்…. அக்மார்க் கமல் டச். கமல் என்னும் மகா நடிகன் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபணம் செய்யும் சவாலான காட்சி அங்கே அரங்கேறுகிறது. ரகுவின் மனைவி….வெளியே ஓடி வந்து ஒரு தாயை போல அவனருகே அமர்ந்து சாப்பிட கொடுப்பாள். “இல்ல அண்ணி…. இன்னைக்கு கொஞ்சமா தான் குடிச்சேன்….” என்று அடித்தொண்டையில் கரகரப்பாக பேச பேசவே அழுகை வந்து விடுகிறது பாலுவுக்கு. “இப்போ நான் ஒண்ணுமே…..கேக்கலயே….. சாப்பிடுங்க” என்று சாப்பிட கொடுக்கையில்…கடவுளின் கையைப் பற்றிக் கொண்டு இயலாமையின் சுமையை தாங்காத அந்த தோற்றுப் போன கலைஞனின் தவிப்பை காண சகியாது. வேறு வழியில்லாத போது அழுகை ஆசீர்வாதம் தான்.

மீண்டும் காலம் மாதவியின் மகளின் மூலமாக அவர்களை சந்திக்க வைக்கிறது. இதற்கிடையில் பாலுவுக்கு குடித்து குடித்து லிவர் பெயிலியர். தன் மகளுக்கு நடனம் சொல்லித்தரும் சாக்கில் பாலுவை தானே வைத்து பார்த்துக் கொள்ள நண்பன் ரகுவின் உதவியோடு அழைத்து வருகிறாள் மாதவி.

நடன வகுப்பு இல்லாத ஒரு நாளில்…இரவு.. குடித்து விட்டு மழையில் ஆடுகிறான் பாலு.

“உலக வாழ்க்கை நடனம்……அது ஒப்புக் கொண்ட பயணம்… அது தொடரும் போது முடியும்.. முடியும் போது தொடரும்…..
அடிக்கடி இருதயம் இறந்தது என்பேனா….. என் கதை எழுதிட மறுக்குது என் பேனே…..”

கிணற்று மேட்டில் மழையோடு சேர்ந்து வயதான பாலு ஆடித் தவிக்கிறான். காண சகியாத மாதவி மறைந்திருந்து பார்த்து மருகுகிறாள். பொட்டில்லாத நெற்றியோடு அவன் முன்னால் சென்றால் தன் கணவன் இறந்தது தெரிந்து விடும். அதை அவனால் தாங்கி கொள்ள முடியாது என்று இருதலை கொல்லி போல தவிக்கிறாள். அவனோ கிணற்று மேல் நிலையில்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறான். மழை கொட்டுகிறது. கால் வழுக்கினால் கிணற்றுக்குள் விழுந்து விடுவான். பாட்டு அவன் வாழ்வை அப்படியே ஆடிக் காட்டுகிறது. அவள் மீது கொண்ட ஆராதனை… ஆறாத ரணமாக வாழ்வெல்லாம் அவனை விரட்டிக் கொண்டிருக்கிறது. இனியும் முடியாது என்று முடிவெடுத்த மாதவி…அவனுக்காக நெற்றியில் குங்குமமிட்டு வெளியே வருகிறாள்.

பாலு தடுமாறி விழ இருப்பதற்கும் அவள் ஓடி வந்து அவன் கையைப் பற்றி தடுத்து நிறுத்துவதற்கும் சரியாக இருக்கிறது. அப்போது கிணுகிணுக்கும் இசை… இசைதேவன்….. மேதாவி… அவர் பங்குக்கு அவரும் நம்மை கொன்று போடுகிறார். இவர் இசைக்கு சாவாதோர் வேறு எதற்கு சாக வேண்டும்…

அதன் பிறகு… இறுதிக் காட்சி.

மாதவியின் மகளின் நடன அரங்கேற்றம்.. அங்கே பாலு ஆடுவதாகவே இருக்கிறது. மனம் நிறைந்த அந்த தோற்ற கலைஞன் முதல் முறையாக வெற்றி பெற்றதாக நம்புகிறான். நண்பனின் கைகளில் சரிந்து மரணிக்கிறான். எதிர் பார்த்ததுதான் என்பது போல ரகு.. பாலுவை சக்கர நாற்காலியோடு அரங்கத்தை விட்டு வெளியேறுகிறான்.

மழை வருகிறது. நண்பன் மேல் மழைத்துளி படக்கூடாது என்று தன் உடலை வளைத்து அவன் முகத்தை மறைக்கிறான். ஓடி வந்த மாதவி அவர்களுக்கு குடை பிடிக்கிறாள். ஓவென அழும் மழையில் நடனம் உணர்கிறோம் நாம்.

இப்படி ஒரு நண்பன் இருந்தால் சாகும் வரை கூட இருக்கலாம். இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளுக்காகவே சாகலாம்.

சலங்கை ஒலி இன்னும் என் காதில் ஒலிக்கிறது…

– கவிஜி

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More