இசை மனிதனின் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையான மொழியறியா ஒரு தளத்தில் உடலை, மனதை ஒழுங்கமைப்பது. மந்திரங்களே இசையின் ஆரம்பமாக இருந்திருக்கலாம். காரணம் மந்திரம் மனித உடலை சடங்குவயப் படுத்தும் ஓர் ஓசைத் தொகுப்பு. மந்திரங்கள் ஒரே ஓசையை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வழியாக எழுப்பப்படும் ஓசை மனித உடலை ஒரு குறிப்பிட்ட லயத்திற்கு வயப்படுத்திவிடுகிறது. அதாவது ஒரு உடலை ஓசைகளின் அடிப்படையில் ஒரு ஒழுங்கைமைப்பிற்குள், ஒரு சூழலுக்குள் தகவமைப்பது. காரணம், ஓசைக்கும் மூளைக்கும் உள்ள உறவே தவிர, அந்த ஓசைக்குள் எந்த மாயமும், இறைசார் அருளும் இல்லை. அடிப்படையில் மனித மூளையுடன் உறவு கொள்ளக்கூடிய ஒலியானது, ஓசையாக பதிவுறுகிறது. இவ்வோசைக்கு மனித மூளை எதிர்வினையாற்றுவதே உடல் மொழியாகிறது. அதாவது ஒரு ஒலி, மூளையில் ஓசையாகப் பதிவுற்று அதனால் மூளை உடலின் இயக்கத்திற்கான கட்டளைகளை கற்பிக்கிறது. இவ்வோசை அடிப்படையில் ஒரு இயக்க ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. இந்த ஆற்றலை உள்வாங்கும் மூளையானது, அதற்கான அதிர்வுகளால் தூண்டப்பட்டு அதற்கேற்ப உடல் மொழியாக வெளிப்படுகிறது.
ஒரு இடிச்சத்தம் உடல் அதிர்வையும் அதனால் அச்சத்தையும், ஒரு குயிலின் சத்தம் உடலின் இசைவுத் தன்மையையும் அதனால் இனிமையான உணர்வையும் பரப்புவதாக அமைகிறது. இடியை ஓசையாகவும், குயிலோசையை இசையாகவும் மூளை ஒழுங்குபடுத்திக் கொள்கிறது. அதனால்தான் அனைத்து ஒலிகளையும் ஓசைகளாகவும், இசையாகவும், மொழியாகவும் பாகுபடுத்திக் கொள்வதாக மனிதமூளை வடிவமைகிறது. மனிதமூளையின் பரிணாம வளர்ச்சியில் ஓசைகளின் பங்கு மிக முக்கியமானது. பாவ்லோவின் மறிவினைச் சோதனைகளில் மணி ஒலித்ததும் நாயின் வாயில் பசியால் உமிழ்நீர் சுரப்பதை, பள்ளிநிலை அறிவியலில் படித்திருப்போம். ஓசைகள் உடலியங்கியலுடன் உறவுபடுத்தப்படுவதன் வழியாக, அவை தொடர் பழக்கத்தில் இச்சை செயல்கள், அனிச்சை செயல்களாக மாறுகின்றன. இசையின் அறிவியலும் இதைதான் செய்கிறது. உடலின் ஒவ்வொரு செயலும் இத்தகைய பழக்கத்தின் வழி உருவாகி தன்னிச்சையாக மாறியதே.
ஆகையினால், ஒலி, ஓசை, மொழி என்ற மூன்றையும் பிரித்தறியும் புள்ளிகள் முக்கியமானவை. ஒலி இயற்கையானது. அதனை ஓசையாக உள்வாங்குவது மனித மூளை. அந்த ஓசையை ஒழுங்குபடுத்த முனையும் மனித மூளை, அதனை சொற்களாக மாற்றும் போது மொழியாகிறது. வெறும் ஓசைகளின் இசைவு ஒழுங்காக மாறும்போது இசையாகிறது. ‘இசை’ என்ற சொல்லே தமிழின் அழகியலை, அறிவியலை வெளிப்படுத்தும் ஒரு சொல். மனித மூளைக்கும், உடலுக்கும் இசைந்த ஒரு ஓசைத் தொகுப்பே இசை எனக் குறிக்கப்படுகிறது. இசை மனித உடலை இயைபு, இசைவுபடுத்தும் தன்மை கொண்டது. ஓசைகளின் தொகுப்பை பெயர்களாக மாற்றி, அவற்றை பொருள்கொள்ளும் ஒன்றே மொழி.
இசை ஒரு பொருளற்ற நிலைக்கு மனித உடலை இசைவு படுத்துகிறது. இரண்டுமே ஓசைகளை அடிப்படையாகக் கொண்டவைதான். மொழி ஓசையின் பொருளாக்கம் என்றால், இசை ஓசையின் இசைவாக்கம் அதாவது, பொருளின்மை அல்லது மௌனத்தின் அதிர்வுகள் என்று கூறலாம். அவ்வகையில் இசை ஓசையின் முதல்நிலை ஒழுங்கமைத்தலாகவும், மொழி ஓசையின் இரண்டாம்நிலை ஒழுங்கமைத்தலாகவும் உள்ளது. ஆதி மனிதர்கள் ஓசைகளை இசை வடிவங்களாக மாற்றினார்கள். இசை இயற்கை நிலையான ஆதிநிலைக்கு மனித உடலை இயைபுபடுத்தும் தன்மை கொண்டிருப்பதால்தான், மொழியற்ற ஆதி மனிதக்குலம்கூட இசையற்று இருப்பதில்லை. இசை நம்மை ஒரு இனிய உலகிற்கு எடுத்துச் செல்வது என்பதன் அறிவியல் அதன் இயற்கை சார்ந்த ஆதிநிலையான மொழியற்ற நிலைக்கு ஒரு உடலை எடுத்துச் செல்வதே. பின்நவீன மொழியில் சொன்னால் பழமையேக்கம் (nostalgia) என்பதே அதன் அடிப்படை. அல்லது ஆதிநிலை ஏக்கம் என்றும் கூறலாம். இந்த விரிவான விளக்கம் இசை என்பது என்ன என்பதை கோட்பாட்டு அடிப்படையில் புரிந்துகொள்ளவே.
“மொழி உருவாகாத காலகட்டம்; மலைகளிலும், காடுகளிலும் உணவுதேடி வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில், அவனைச் சுற்றி இருந்த மலைகளிலிருந்து ஆறு சலசலத்து ஓடுவதையும், அருவி பேரோசையுடன் விழுவதையும், காற்றின் ஓசைகளையும், விலங்குகளின் முழக்கங்களை, பறவைகளின் இனிய ஒலிகளையும் உன்னிப்பாகக் கேட்கப் பழகி இருந்தான். இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொண்டிருந்தான். ஓசை-ஒலி இரண்டிற்குமான வேறுபாடுகளை புரிந்து கொண்டிருந்தான்” என்று தனது “திரை இசையில் தமிழிசை” நூலைத் துவக்குகிறார் நிழல் ப. திருநாவுக்கரசு. இசையின் தோற்றம் முக்கியத்துவம் குறித்து துவங்கும் இந்நூல் தமிழ்த் திரை இசை குறித்து ஒரு கலைக்களஞ்சியமாக வெளிவந்துள்ளது. 1000 தமிழ்த் திரைப்படங்களில் இருந்து 3000 பாடல்களின் இசையமைப்பை ஆராய்ந்து அவற்றின் 212 இராகங்களைக் கண்டுபிடித்து தொகுத்துள்ளார். இத்துடன் நின்றிருந்தால் வெறும் விபரக் குறிப்புகளாக அல்லது தரவுகளாக மட்டுமே கொண்டதாக இருந்திருக்கும். ஆனால், இத்துடன் தமிழ் இசை வரலாற்றை சுமார் 200 பக்கங்களில் விவரிக்கிறார்.
இந்நூலை மூன்று பகுதிகளாக பிரித்திருந்திருக்கலாம். ஆனால், பகுதிகளாக இல்லாவிட்டாலும், உள்ளடக்கம் அதன் அமைப்பில் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி தமிழிசை வரலாறு, வரையறை, விளக்கம் என்பதாக உள்ளது. அதில் தமிழரின் தொல் இசை துவங்கி, திணை இசை, அதற்கான பறை, யாழ், பண் என்ற அட்டவணை, தமிழர்களின் இசைக்கருவிகள், தமிழிசைத் தோற்றம், இசை பிறக்கும் இடங்கள் என பண் மற்றும் அதன் பிரிவுகள், பாலைகள், ஏழிசையின் பிறப்பு, ‘பஞ்ச மரபு’ என்ற பழந்தமிழ் இசைநூல் முன்வைக்கும் 10 இசை அறிதல்கள் பரிபாடலின் இசையமைப்பும் வரலாறும் எனத் தொடர்ந்து விவரிக்கிறார். இதில் ஒரு முக்கியமான அட்டவணையை முன்வைக்கிறார். அதில் சங்கப்பாடல்களில் பண்கள் அதைப் பாடிய புலவர்கள், இசையமைத்தவர்கள் என்ற ஒரு வரிசை நிரல் தரப்பட்டுள்ளது. சங்ககாலத்திலேயே இசையமைத்துப் பாடும் முறை பற்றிய தகவல் ஆச்சர்யம் தரும் ஒன்று. அதன்பின் தமிழர்கள் கண்ட இசைக்கருவிகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அவற்றை நான்காக வகைப்படுத்தியுள்ளார். 1.தோல் கருவிகள் 2.துளைக்கருவிகள் 3.நரம்புக் கருவிகள் 4.கஞ்சக் கருவிகள் (உலோகம்) என்று. பறை, துடி, கஞ்சிரா, உடுக்கு, இடக்கா, திமிலா, குடமுழா (தமிழகத்தில் மட்டுமே காணப்படும் வாத்தியம் என்கிறார்), சிறுபறை, முரசு, கிரிகட்டி, குந்தளம், தவில், செண்டை, கட சிங்காரி, டக்கி, டக்கா, நாகசுரம், மகுடி, சங்கு, யாழ் (பல்வேறு யாழ் வகைகள்), வீணை (வகைகள் துந்தனா, தம்புரா, சுரமண்டலி), குழித்தாளம், கைத்தாளம், சலங்கை, சேகண்டி, திருச்சின்னம், கொம்பு என படங்களுடன் இவ்வாத்தியங்களின் பாகங்கள், பயன்பாடு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
அதன்பின் தமிழிசைக் கலைஞர்கள் என பாணர்கள், பாடினிகள், நாகசுரக்காரர்கள், ஓதுவார்கள், தேவரடியார், நட்டுவனார்கள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அத்துடன் தமிழிசை குறித்த கல்வெட்டு ஆதாரங்கள், தமிழிசை குறித்த நூல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. காலந்தோறும் தமிழிசை மாற்றங்கள் பரிபாடல் துவங்கி பாரதிதாசன் காலம்வரை தொகுக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், தேவாரம், பிரபந்தங்கள், பிற்கால பக்தி இயக்கவாதியான அருணகிரிநாதர், சித்தர்கள், சிற்றிலக்கியப் பண்கள் என ஒரு நீண்ட வரலாறு இசை வரலாற்றுக்குத் தேவையான வகையில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழிசை முன்னோடிகள் முத்துத்தாண்டவர் துவங்கி ராமலிங்க வள்ளலார், பாரதியார் வரை ஒரு நீண்ட பட்டியலை அவர்களது பங்களிப்புடன் விளக்கிச் செல்கிறார். அதன்பின் தமிழிசை கிரேக்கம், அரேபியா, யவன தேசங்களில் பரவியதைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதி திரையிசை பற்றியது. இது தமிழ்த் திரையிசை முன்னோடிகள், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த பாடல்கள் என திரையிசைப் பாடல்களின் பல்வேறு வகைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. நாடகத்திலிருந்து வந்த பாடல்கள், திரை இசைமேதைகள், திரைஇசைப் பாடகர்கள், திரை இசைக் கவிஞர்கள் என சுமார் 130 பக்கங்கள் குறிப்புகளுடன் ஆய்வுச் செய்திகள் என விரிவாகத் தரப்பட்டுள்ளது. பல அரிய புகைப்படங்கள், தமிழ்த் திரையிசையில் பல அறியாத நிகழ்வுகள், வரலாற்றுக் குறிப்புகள், வாழ்க்கைக் குறிப்புகள் துல்லியமாக நுண்மான் நுழைபுலத்துடன் இந்த ஆய்வுப் பகுதி அமைந்துள்ளது. தமிழ்த்திரை இசை வரலாற்றை யாரும் இத்தனை குறிப்புகளுடன் விரிவாக எழுதியதாக இதுவரை தெரியவில்லை. கானா பாடல்கள் துவங்கி கருநாடக இசை விற்பன்னர்கள் வரை இதில் தொகுக்கப்பட்டுள்ளனர்.
திரையிசையில் பாடல்கள் எப்படி எழுதப்படுகிறது என்கிற குறிப்பும் இதில் உள்ளது. ‘தொல் தமிழனின் இசை’ அறிமுகம் துவங்கி ‘திரையிசைப் பாடகர்கள்’ என 34 அத்தியாயங்களில் விரிவாக தகுந்த ஆதாரங்களுடன், உரிய அரிய படங்களுடன் விளக்கி உள்ளார். மூன்றாவது பகுதி ‘திரையிசையில் தமிழிசை’. இது முழுக்க 212 இராகங்கள் அதை ஒட்டிய பாடல்களின் குறிப்புகள் என நீள்கிறது.
தமிழிசை குறித்த ஆய்விற்கான அடிப்படைத் தரவுகள், விபரங்களுடன் ஒரு ஆவணமாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை பக்கத்திற்கு பக்கம் உரிய படங்களுடன் அழகுற உருவாக்கியுள்ளனர். தமிழர்களின் இசை, இசைக்கருவிகள், தமிழிசையின் தோற்றம், தமிழன் கண்ட இசைக்கருவிகள் உரிய படங்களுடன், முதல் ஏழிசைகள் என “தமிழிசையின் சிறப்பே ‘பண்’கள்தான்” என்பதை சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறார். பண்கள் என்றால் என்ன? பண்ணின் பிரிவு, பாலைகள், பண்ணு பெயர்த்தல், ஏழிசைகளின் பிறப்பு, ஏழிசைகள் என்று இன்று வடமொழி சாஸ்திரிய சங்கீதத்தில் கூறப்படும் ஏழு இராகங்கள் தமிழின் பண்டைய காலங்களில் எப்படி தோற்றம் கொண்டது, தமிழ் ஓசைகளுடன் அவற்றிற்கு உள்ள தொடர்பு ஆகியவை பேசப்பட்டுள்ளன. கருணாமிருத சாகரம் நூல் எழுதிய ஆப்ரகாம் பண்டிதரின் ஆய்வுகள் வழி எப்படி இத்தமிழிசை நிறுவப்பட்டுள்ளது என்பதை “வட்டப்பாலை” எனப்படும் தமிழ் இசை எப்படி வானவியலோடு தொடர்பு கொண்டது, அதை எப்படி பண்ணு பிரிக்கமுடியும் என்பதையும் வரைபடத்துடன் விவரித்துள்ளார்.
தமிழின் முதல் இசை நூலான சங்ககால “பஞ்ச மரபு” கூறும் 103 பண்கள், பண்களின் பெயர்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார். இப்பெயர்கள் மலர்கள், நிலம், தெய்வம், மன்னர், வினை, சிறுபொழுது ஆகியவற்றை கொண்டு அழைக்கப்பட்டதை கூறுகிறார். மனிதர்கள் ஒன்றை புதிதாக எதிர்கொள்ளும்போது அதனை தனக்கு பரிச்சயமான ஒன்றுடன் ஒப்பிட்டு அதற்கு ஒரு பெயரை சூட்டுவார்கள். அந்த ஒப்பிடல் என்பது நான்குவகையாக அமைகிறது என்கிறார் பிரஞ்சு சிந்தனையாளர் மிஷல் பூஃக்கோ. மனிதர்களின் அறிவுத் தோற்றம் குறித்த இக்கருத்துடன் ஒப்பிடுவதற்கான சங்ககாலத் தமிழ் அறிவுத் தோற்றத்திற்கான சான்றாக இது அமைந்திருப்பதை அறியமுடிகிறது.
சாஸ்திரிய சங்கீதம் எனப்படும் இராகங்கள் அடிப்படையிலான சங்கீதம் உயர் வகுப்பினருக்கானதாக, மேட்டிமைவாதிகளுக்கானதாக கருதப்பட்டது. ஆனால், அது தமிழிசையின் அடிப்படையில் உருவமைக்கப்பட்டது என்பதாக, இந்நூலின் தமிழிசை வரலாற்றைப் படிக்கும்போது உணர முடிகிறது. தமிழியம் சார்ந்த கோட்பாட்டாக்கத்திற்கு இசைத்தமிழ் சார்ந்த வரலாற்றிற்கு இந்நூல் பல திறப்புகளைத் தருவதாக அமைந்துள்ளது. தமிழிசை என்பது வடமொழி சாஸ்திரிய உயர்சாதி இசைக்கு எதிராக மக்கள் இசையாக மாறியது திரையிசையில்தான் என்பதை இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்ட பல இராகங்கள், பண்கள் வழி அறிய முடிகிறது. நாம் ‘டப்பாங்குத்து’ என்று கீழமைப் பண்பாடாக ஒதுக்கிய பல பாடல்களின் இராகங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. உண்மையில் தமிழிசை தழைத்தோங்கியது திரையிசை வழியில்தான் என்பதை நுட்பமாகவும், ஆதாரத்துடனும் முன்வைக்கிறது இந்நூல்.
சங்க காலத்திலேயே இன்றைக்கான திரையிசை இலக்கணங்களை எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். “ஒரு பாடலை இசையமைப்பாளன் இசை அமைப்பதற்கு முன், அது என்ன வகையான “பா” என்பதை அறிய வேண்டும்; அதிலுள்ள சொற்களின் புணர்ப்பை அறிய வேண்டும்; பாடலின் பொருளை உணர வேண்டும். அப்போதுதான் அதற்கொப்ப இசையமைக்க முடியும். இதுபோல அந்தப்பாடல் என்ன காலத்தில் / நேரத்தில் பாடப்படுகிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்றாற்போல ராகங்களை தேர்வு செய்யலாம். அந்தப்பாடலை பாடப்போகிறவனுடைய இயல்பை அறிந்திருத்தல்; அந்தப்பாடலுக்கான நிலையும், தாளத்தையும் தேர்வு செய்வது, அதன் பிறகு பாடலுக்கேற்ற பண் – ராகம் நிறம் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்கிறது பஞ்சமரபு.” என்று சங்ககாலத்தில் அறிவனார் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் இசைநூலில் இருந்து எடுத்துக் காட்டுகிறார். இது தற்போது திரையிசையை அமைப்பதற்கான இலக்கணத்தை அப்படியே அடிபிறழாமல் சொல்வதைக் காணலாம்.
தமிழ் மக்களின் காதுகளை, கேட்புத்திறனை இசைவுபட தகவமைத்ததில் திரையிசைக்கு பெரும் பங்கு உண்டு. திரையிசை தமிழ் மக்களின் வாழ்வில் பல விழாக் கொண்டாட்டங்களை, மன உணர்வுகளை, சிறப்பான தருணங்களை, காதலை, காமத்தை, பாசத்தை, அன்பை, தாய்மையை, சகோதரத்துவத்தை, நட்பை பகிர்ந்துகொண்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில் திரையிசை என்பது உயர்சாதிகளால், மேட்டிமையினரால் ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழில் ஒரு தலைமுறையினரின் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டது திரையிசையே. பல ஹாலிவுட் ஆங்கிலப்பட இயக்குநர்கள், இந்திய ஒன்றிய சினிமாவின் திரையிசைப் பாடல்கள் குறித்து யதார்த்தமற்றது என்ற விமர்சனங்களை வைத்துள்ளார்கள். ஆனால் இந்திய ஒன்றிய சினிமாக்கள் தோன்றிய புராண, இதிகாச, பழங்கதைகள், நாட்டார் கதைகள் நாடகங்களை அடியொற்றி வந்ததால், இந்திய ஒன்றிய திரை யதார்த்தம் என்பதுடன் பாடல்கள் பிரிக்க முடியாததாக அமைந்துவிட்டது.
ஆனாலும், பாடல்கள் பெரும்பாலும், திரைக்கதையில் ஒரு அதிர்வை, ஒரு பெரிய மாற்றத்தை, கால உறைவை (time freeze) ஏற்படுத்தவே பயன்படுத்தப் படுவதை நுட்பமான சினிமா திறனாய்வில் உணரலாம். சான்றாக, ஒரு பாடல் முடிந்தவுடன் திரைக்கதையில் ஒரு அதிர்ச்சி, ஒரு முடிச்சு, ஒரு திறப்பு, ஒரு கதை மாற்றம், ஒரு கால மாற்றம் நிகழ்வதைக் காணமுடியும். இரண்டு காட்சிகளுக்கு இடையில் உள்ள அந்த பெரும் மாற்றத்தை அடுத்தடுத்து காட்சியாக வைத்தால் பார்வையாளர்கள் ஏற்பது கடினம் என்பதால், ஒரு கால, இட, நிகழ்வு உறைவை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வு மாற்றத்தை, ஒரு உணர்ச்சி நிலையை (mood) உருவாக்கவும் திரையிசைப் பாடல்கள் முக்கியமானவை. இப்பாடல்களின் இராகங்கள் உருவாக்கும் உணர்வு நிலையை அறிய, இத்தொகுப்பில் உள்ள பாடல்களின் பட்டியல் முக்கியமானது. இது சினிமா இசையமைப்பாளர்களுக்கும், துறை சார்ந்தவர்களுக்கும் மட்டுமின்றி பொது வாசகர்களுக்கும் இராகத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு கையேடாக உருவாக்கப் பட்டுள்ளது.
முன்னுரையில் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு கூறுகிறார், “திரைப்படப் பாடல்கள் மூலம் ராகங்களை எளிமையான முறையில் எப்படி அறிந்து கொள்வது என்ற பயிற்சியையும் மேற்கொள்வதற்கான வழியையும் சொல்லி இருக்கிறேன்” என்று. அப்படி பயிற்சி எடுப்பது எப்படி என்ற வழிமுறையையும் ஓரிடத்தில் விளக்கியுள்ளார். அவர் தொகுத்துள்ள 3000 தமிழ் பாடல்களில் ஒவ்வொன்றையும் எப்படி கேட்டு இராகங்களை கண்டுபிடிப்பது என்பதையும் கூறியுள்ளார்.
தமிழிசை குறித்த சங்ககாலம் துவங்கி இன்றுவரை இதுவரை வந்துள்ள பல ஆய்வறிஞர்களை வாசித்து தனது ஆய்விற்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தி திரையிசையில் தமிழிசை எப்படி பயின்று வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். சில இடங்களில் இராகங்களின் தமிழ்ப் பண் பெயர்களையும், கருநாடக இராகங்களுக்கு சமமான பெயர்களையும் தந்துள்ளதால், ஒரேநேரத்தில் இரண்டு துறைகளிலும் அறிவதற்கான ஒரு வழிகாட்டுதலைத் தருவதாக அமைத்துள்ளார். “திரையிசையில் தமிழிசை” என்ற பகுதியில் 212 இராகங்களின் தலைப்பில் 3000 பாடல்களைப் பட்டியலிட்டுள்ளார். பாடியவர்கள், படம், ஆண்டு, இசையமைப்பாளர் விபரங்களுடன் ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு சிறிய முன்னுரையையும் புகழ்பெற்ற பாடலின் திரைக்காட்சிப் படத்துடன் வெளியிட்டுள்ளார். அத்துடன் அதன் சரளிவரிசை எனப்படும் ஆரோசை மற்றும் அமரோசை (ஆரோகணம், அவரோகணம் என்பார்கள் கருநாடக சங்கீதத்தில்) ஆகியவற்றையும் தந்துள்ளார். அதோடுகூட அந்த இராகம் தமிழில் முதலில் பயன்படுத்திய இலக்கிய வகைகள் (சான்றாக தேவாரம், பரிபாடல், திருவாசகம், பிரபந்தம், நாட்டார், சித்தர் போன்றவை) குறித்த குறிப்பும், அதில் அமைந்த கீர்த்தனைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அணிந்துரையில் அமெரிக்க மிக்சிகன் பல்கலையில் சினிமா ஆய்வுத்துறையின் பேராசிரியராக உள்ள சொர்ணவேல் அவர்கள் கூறுகிறார், “சினிமாவில் சங்க இலக்கிய அழகியலின் தாக்கம் போன்ற இலக்கியத்தைக் கொண்டு அல்லது அதன் நீட்சியாக சினிமாவை வாசிப்பதைப்போல சினிமாவின் தனித்துவத்தை கருத்தில்கொண்டு அதன் மொழியுடன் இணைத்தே இலக்கியத்தை வாசிக்கக்கூடிய பிலிம் ஸ்டடீஸ் சார்ந்த பல்கலைச்சூழல் சமீப ஆண்டுகளில்தான் கைகூடியிருக்கிறது. அத்தகைய ஆய்வுகளுக்கு இன்றியமையாதது இத்தகையதொரு என்சைக்ளோபீடியா கலைக்களஞ்சியம். பல்கலைக்கழகங்கள் மற்றும் இசைக்கல்லூரிகள் செய்யவேண்டிய, காலத்தையும் காசையும் உடலுழைப்பையும் கோரும் இத்தகைய அறிவுத்தொகுப்பை, நமக்கு அளித்துள்ள நண்பர் திருநாவுக்கரசு அவர்கள் என்றும் என் நன்றிக்கு உரித்தானவர்” என்று. 414 பக்கங்கள் கொண்ட பள்ளிப் பாடநூல் சைஸில் அமைந்துள்ள இந்நூலை வாசித்தபோது, நண்பர் சொர்ணவேல் கூறியது எத்தனை உண்மையான சொற்கள் என்பதை உணர முடிந்தது. ஒரு பல்கலைக்கழகப் பணியை 30 ஆண்டுகள் உழைத்து சேகரித்து இதனை ஒரு தனிமனிதராகச் சாத்தியப்படுத்தியுள்ளார் நண்பர் திருநாவுக்கரசு. ஆச்சர்யமாக உள்ளது. 1000 படங்களில் இருந்து 3000 பாடல்களை அவரே கூறுவதைப்போல ஒன்றுக்கு நூறுமுறைக் கேட்டு அதன் இராகத்தை எட்டிப்பிடித்து அதன் விபரங்களைத் தொகுத்து எழுதுவதற்கான நேரம், உழைப்பு, செலவு என்பது அசாத்தியமானது. அவரது 40 ஆண்டுகால கனவாக இந்நூலை உருவாக்கியுள்ளார் என்றே தோன்றுகிறது.
அவரது 40 ஆண்டுகால சினிமா சார்ந்த ஈடுபாடுகள் (குடந்தைக் கல்லூரியில் அவர் படித்த காலங்களில் எங்கள் அனைவருக்கும் சினிமாக் கனவுகள் இருந்தது. ஆனால், அவர் மட்டுமே அதை தொடர்ந்து வந்துள்ளார்), தமிழில் தொடர்ந்து வரும் சீரிய சினிமா குறித்த இதழான நிழல் ஆசிரியராக இருந்துவரும் அனுபவங்கள், சினிமா குறித்து அவர் எழுதிய நூல்கள், குறிப்பாக இசைத்துறைச் சார்ந்த விற்பன்னர்கள், தமிழிசை உருவாக்கிய ஆசான்கள் குறித்து வாழ்க்கை வரலாற்று நூல் எழுதிய அனுபவங்கள், குறும்பட, ஆவணப்படப் பயிற்சிப் பட்டறைகள், சினிமா குறித்த பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்த அனுபவம் ஆகியவற்றுடன் திரைப்படக் கல்லூரி ஒன்றை தன்னந்தனியராக நடத்தி வரும் அனுபவங்கள், மாணவர்களுக்கு தரும் பயிற்சிகள் ஆகியவை தந்த அனுபவம் மற்றும் அறிவுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளதே இதன் சிறப்பு. இவை எல்லாவற்றையும்விட அவரது இளமைக்கால திராவிட இயக்க, இடதுசாரி இயக்க அனுபவங்களின் அரசியல் மற்றும் தமிழ் மீது அவரது ஆர்வம், தமிழ் இலக்கியங்களை படித்து, அதன் வரலாற்றை அறிந்து தமிழ் அறிவின் கூர்மை ஆகியவற்றை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது இந்நூல்.
தமிழிசை பற்றியும், திரை இசை பற்றியும் அவரது ஆழங்கால் பட்ட அறிவை இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது. “நூல் முழுவதுமே ‘ரசனை முறை’யை தவிர்த்துவிட்டு வரலாற்று நோக்கு ஒன்றையே முதன்மையாக கொள்ளப்பட்டிருக்கிறது” என்று தனது முன்னுரையில் கூறியுள்ளதை கவனம் பிசகாமல் பின்பற்றியுள்ளார். திரையிசை குறித்து வெளிவந்துள்ள தமிழ் நூல்கள் பெரும்பாலும் ரசனை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. விதந்தோதுதல் அல்லது விமர்சித்து ஒதுக்குதல் என்பதாகவே அமைந்திருக்கும். மாறாக, இந்நூல் திரை இசையின் வரலாற்றுடன், தமிழிசையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் ஒருசேரப் பேசுகிறது. வழக்கமாக ஒரு சிறந்த பாடலை எடுத்துக் கொண்டு அதன் இசைநயம், அதன் கருத்து, காட்சியமைப்பு, கவித்துவ செறிவு எனப் பேசும் வழக்கமான ரசனைவாதத் திறனாய்வை தவிர்த்துவிட்டு, அப்பாடலின் இராகம், அந்த இராகத்தைக் கண்டுபிடிக்கும் பயிற்சிமுறை என்பதை விளக்கிச் செல்கிறது இந்நூல்.
கருநாடக இசை என்று இன்று பேசப்படும் ஏழிசை இராகங்கள் எப்படி தமிழ்ப் பண்களிலிருந்து பெறப்பட்டு வளர்ந்து, பிற்காலத்தில் கருநாடக இசை உயர்ந்தது என்று தமிழிசை புறந்தள்ளப்பட்டது என்பதை நுட்பமாக வாசிப்பில் உணரும் வண்ணம் வரலாற்று உணர்வுடன் எழுதப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பு. மேலும், ஆசிரியரின் இக்கூற்று முக்கியமானது. “தமிழிசையின் சிறப்பே ‘பண்’கள் தான்”. அதற்குத் தக பண்ணிசை குறித்த விரிவான வரலாற்றுடன், தமிழிசைக்கும் இராகங்களுக்கும் உள்ள உறவை சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். குடந்தை சுந்தரேசனார் அவர்களோடு கல்லூரிக் காலத்தில் பழகியது முதல் தமிழிசை குறித்த இவரது ஆர்வம் விதையாகி, வேர்பரப்பி ஒரு ஆலமரமாக பல கிளைகளுடன் பரவி நிற்கிறது இந்நூலில்.
இந்த அறிமுகவுரையை வாசித்தபின் இதை எழுதிய நான் இசை பற்றி நன்கு அறிந்தவன் என்று நீங்கள் எண்ணக்கூடும். இசையைப் பொறுத்தவரை எனது அறிவு, தமிழ் திரைப்படப் பாடல்கள் கேட்பதும், அதனை உள்வாங்கி ரசிப்பதுமே. குறிப்பாக நாட்டார் பாடல்கள், கானாப்பாடல்கள், பீட் சாங்க்ஸ் எனப்படும் டப்பாங்குத்து பாடல்களை ரசிப்பதும், அதிதீவிர சோகப் பாடல்களைக் கேட்பதையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆனால், இந்நூல் வழியாக, இசையில் குறிப்பாக நாம் அன்றாடம் கேட்கும் தமிழ் திரையிசைப் பாடல்களில் இத்தனை இராகங்கள், அதன் நுட்பங்கள், அது ஏற்படுத்தும் மன ஓர்மை, மனநிலை ஆகியவற்றை அறிய முடிந்தது. ஒரு பாடலின் உருவாக்கம் என்பது அத்தனை சாதரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. அதற்கான பண்ணிசையை கண்டுபிடித்து அப்பாடலை மிகச்சரியாக வடிவமைப்பது என்பது ஒரு பெரும் சாதனைதான்.
தமிழ்த் திரையிசை இல்லாவிட்டால் நமக்குள் ஒரு இசைவான அழகியலை உள்வாங்கும் ஒரு அமைதியை அனுபவிக்கும் மனநிலை வாய்த்திருக்காது. தமிழர்களையும், திரைப்படங்களையும் பண்பாட்டு ரீதியாக பிரிப்பது அத்துணை சுலபமல்ல. அதிலும் தமிழ்த் திரையிசை வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. அத் திரையிசை எப்படி தமிழிசையாக ஒரு தமிழியம் சார்ந்த சிந்தனை ஒழுங்கிற்குள் அமைந்துள்ளது என்பதையும், அதன் இராக இலக்கணம் எப்படி ஒரு கோட்பாடாக வடிவமைகிறது என்பதையும் புரிவதற்கான தரவுகள் கொண்ட ஓர் ஆவணத் தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூல். இதனைத் தனது தனிப்பட்ட தினவாழ்வில் மிகப்பெரும் சிரமங்களை பொருளாதாரரீதியாகவும், சமூக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரமற்றும், கண்டும் காணாமல் விடப்பட்ட நிலைக்கும் ஆளான போதும், இந்தப்பணியை தனது வாழ்நாள் சாதனையாக நிகழ்த்தியுள்ள நிழல் ப. திருநாவுக்கரசை பாராட்டாமல் இருக்க முடியாது, இலக்கிய அரசியலாலும், லாபிகளாலும், சுயநலத்திலும் ஊறிப்போன இலக்கிய உலகில் இத்தகைய தனிநபர்கள் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுவதும் ஒரு அரசியல் நடவடிக்கையே..
திரை இசையில் தமிழிசை (இசை-வரலாறு-ஆய்வு)
– ஜமாலன்
நன்றி : கீற்று இணையம்