அமெரிக்காவின் அயோவா மாநில ஜாஸ்பர் கவுன்டி பகுதியில் உள்ளது கோல்ஃபாக்ஸ் நகரம்.
இந்நகரத்தில் வசிப்பவர், ஆரோன் பார்த்தலோமி (Aaron Bartholomey).
சிறு வயதில் தனது தாத்தாவுடன் கடைகளுக்கு செல்லும் போது ஆரோனுக்கு பென்சில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வயது முதலே சேகரிக்க தொடங்கினார்.
இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பொழுதுபோக்காக மாறியது. இவரிடம் பல நிறங்களில் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன.
உலகெங்கும் நடைபெறும் அரிதான சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனம், கின்னஸ் உலக சாதனை பதிவகம் (Guinness World Records).
இந்நிறுவன பதிவுகளின்படி, அதிக பென்சில் சேகரித்த சாதனை எண்ணிக்கை 24,000 என இருந்தது.
இதை கேள்விப்பட்ட ஆரோன், தனது சேகரிப்பை பார்க்க வருமாறு அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்திற்கு (American Pencil Collectors Society) அழைப்பு விடுத்தார்.
கடந்த ஜூலை மாதம், அவர்கள் கணக்கெடுப்பை தொடங்கினர். அவர்களிடம் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்திற்கு ஆரோன் தனது சேகரிப்பு குறித்த விவரங்களை அனுப்பினார்.
கின்னஸ் நிறுவனத்தினர் மீண்டும் ஓர் ஆய்வை நடத்தினர்.
3 மாதங்களுக்கு பிறகு கின்னஸ் நிறுவனத்தால் ஆரோனுக்கு, “உலகிலேயே அதிக பென்சில்கள் சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்தவர்” எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.