இங்கிலாந்து அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களின் கீழ், வேலையற்ற இங்கிலாந்துப் பிரஜைகள் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார்.
கல்வி மற்றும் உடல் தகுதி கொண்ட இங்கிலாந்துப் பிரஜைகள் வேலைத் தேடிக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு அரசு வழங்கிவரும் உதவிகளை இழக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்தும் இங்கிலாந்து மக்களை இனி ஏமாற்ற முடியாது எனவும் கடினமாக உழைத்து வரி செலுத்துவோருக்கு நியாயமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனாவிற்கு பின்னர் 2.6 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
அவர்களை மீண்டும் வேலைக்கு திருப்புவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் தாம் தீவிரமாக உள்ளதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் உள்ள நிலையில், வேலையற்ற இங்கிலாந்து பிரஜைகள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.