இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம், இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கருத்து வேறுபாட்டைத் தூண்டும் போக்கை நிராகரிக்கும்படி, இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி உரையாற்றி போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அனைவரையும் உள்ளடக்கும் திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அண்மையில் நடந்து முடிந்த இந்தியத் தேர்தல் உலகெங்கும் ஜனநாயகச் சக்திகளுக்கு வலுச்சேர்த்திருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.
2021ஆம் ஆண்டு முதல் இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளியல்களில் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், இந்தியப் பொருளியல் ஆண்டுக்குச் சராசரியாக 8 சதவீதம் வளர்ந்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதுடெல்லி – செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தமையைத் தொடர்ந்து 11ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.
விழாவில், முப்படை வீரர்கள், துணை இராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்ததோடு, இராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்ற விழா உற்சாகமாக நடந்தன. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்துக் கொண்டாடினர்.