பொருளாதார மேம்பாட்டுக்கு கைகோர்க்க இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணக்கம் கண்டுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்றாஹீம் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் (Quantum mechanics ) தொழில்நுட்பத் துறைகள் இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய புதிய துறைகள் என இரு நாட்டு பிரதமர்களும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மலேசிய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இந்திய தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்பட்டுள்ளன.
அத்தோடு, மலேசிய மாணவர்களுக்கு 100 புலமைப்பரிசில்களை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
மலேசியப் பிரதமரின் இந்திய விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
“முதலீடுகள், வர்த்தகம் மற்றும் கட்டிட நிர்மாணம், விவசாயம், ஆராய்ச்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அடங்கலாக எங்களது எல்லைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மைக்கு எங்கள் உறவுகளை மேம்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். எங்களுக்கிடையிலான நட்புறவை மென்மேலும் மேம்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.