புகழ்பெற்ற இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா (Ratan Tata) காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 86 ஆகும்.
இந்தியாவின் Tata குழுமத்தை உலகளாவிய கூட்டு நிறுவனமாக மாற்றியது ரத்தன் டாடா. அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக Tata குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்தியாவின் புதிய நிறுவனங்களில் Tata குழுமம் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது. பல சமூகத் திட்டங்களுக்கு ரத்தன் டாடா நன்கொடைகளையும் வழங்கிவந்தார்.
அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் தொடர்ந்து அனுதாபம் தெரிவித்துவருகின்றனர்.
ரத்தன் டாடாவுக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டன. அவருக்கு 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.
இந்தியாவிற்குப் பெரும் பங்கு வகித்த ரத்தன் டாடாவுக்குச் சிங்கப்பூர் அதே ஆண்டு கௌரவக் குடிமகன் விருதை வழங்கியது.
ரத்தன் டாடா காலமாவதற்கு முன்னர் அவர் மும்பை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் ரத்தன் டாடா திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
இறுதிச் சடங்கு
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நல்லுடல் இறுதி அஞ்சலிக்காக மும்பையிலுள்ள தேசிய மேடைக்கலை நிலையத்தில் வைக்கப்படும் என்று மகராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவையொட்டி மகராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.