தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், பேரறிஞர் அண்ணாவை திமுக புறக்கணித்துள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோட்டில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பி கருணாநிதி என எதிர்கால தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்ய தி.மு.க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி களத்தில் இருந்த போது கட்சி தொடங்கிய தான், விஜய்யை பார்த்து பயந்துவிட்டதாக கூறுவது வேடிக்கை என சீமான் தெரிவித்தார்.
5 வயதிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் தான் டீசண்ட் பொலிடீசியன் கிடையாது என்று கூறிய சீமான், மொழி, இனம் என பிரிக்கக்கூடாது எனக்கூறும் விஜய் ஏன் கேரளா, ஆந்திராவில் கட்சி தொடங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, கலைஞர் கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாக எடப்பாடி பழனிசாமி பொங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.