இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்தது.
மேலும், 16 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக Times Now செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பிறந்து ஒருசில நாள்களே ஆன 39 பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனையின் வேறொரு புதிய பிரிவில் பராமரிக்கப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் அடையாங்காணப்பட்டுள்ளனர். மூவரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இக்குழந்தைகளை அடையாளம் காண மரபணுப் பரிசோதனை நடத்தப்படும் என்று மாநில அமைச்சர் கூறினார்.
தீ சம்பவத்தின் போது மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் குழந்தைகள் வைக்கப்படும் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்ததாக NDTV தெரிவித்தது.
குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தீப்பரவலுக்கான காரணம்
உயிர்வாயு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
தீ பரவியதற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடில்லியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் ஜான்சி நகரில் உள்ளது மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி.