இந்தியாவின் புகழ்பெற்ற திருப்பதியில் உள்ள திருமலைக் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி, திருமலைக் கோயிலில் இலவச தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது பக்தர்களுக்கு இடையே நடந்த மோதலால் நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. இதில் 30 பேர் காயமடைந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போதிய அளவு பொலிஸாரும் பணியில் இல்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
பிரதமர் இரங்கல் ; ரோஜா கேள்வி
நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு அதிகாரிகள் உரிய உதவிகள் வழங்குவர் என்று பிரதமர் உறுதியளித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் சேலத்தை சேர்ந்த மல்லிகா எனும் பெண் உள்ளடங்குகிறார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, “புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
“திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தச் சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா அல்லது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து பவன் கல்யாண் ராஜினாமா செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.