இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை, பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். அதாவது எதிர்வரும் 19ஆம் திகதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன என ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும், நவம்பர் மாதம் சாதனை வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே, மேற்படி ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.