பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர். இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், இலட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கூறியுள்ளார்.
அத்துடன், காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.