கனடா, டொரொண்ட்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றையதினம் (18) விபத்திற்கு உள்ளான Delta Air Lines விமானத்தின் கருப்புப் பெட்டிகள் (Flight recorder – விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும்) மீட்கப்பட்டுள்ளன.
அவற்றைச் சோதனைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தோரில் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகித் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 21 பேருக்குக் காயம். அதுவரை விமானம் விபத்துக்குள்ளாகப்போகிறது என பயணிகளுக்குத் தெரியாது என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்தி; கனடாவில் தரையிறங்கும் போது விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம்
விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பற்றியது. எனினும், அது துரித செயற்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கனடாவின் சுமார் 20 பேர் அடங்கிய புலனாய்வுக்குழு இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறது.
அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு, கனடா போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இந்த விசாரணையில் இணைந்துள்ளன.