மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பொருட்டு, இந்திய பிரதமர் பிரதமர் மோடி இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மொரீஷியஸ் சென்றுள்ளார்.
தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார்.
மொரீஷியஸின் இன்றைய தின (12) தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று மோடி அங்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த விஜயம் தொடர்பில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மொரீஷியஸ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் பங்கேற்பது உட்பட இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (12) மதியம் பிரதமர் மோடி-மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும், இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.