தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது.
குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
“10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல.
“ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.