அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, இலங்கை, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரி விதித்ததுடன், 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறினார்.
எனினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிப்பை அறிவித்தார். இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார். பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
மேலும், அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
மேலும், விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. 145 சதவீதமாக இருந்த வரி தற்போது மேலும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டு 245 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு சீனாவும் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.