இந்தோனேசியாவில் சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை என்று இந்தோனேசியா பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.