இந்தோனேசியாவின் Sunda ஜலசந்தி அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 16 மீனவர்களில் 10 மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். Anak Krakatau அருகே ஏற்பட்ட பெரும் அலைகளில் சிக்கிய படகு விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகின்றது. இதில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 10 பேரை தேடி வருவதாகவும் இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் பேச்சாளர் முகமது யூசப் லட்டிப் தெரிவித்துள்ளார்.
படகு விபத்துக்குள்ளான நிலையில் Rakata தீவை நோக்கி நீந்தி தப்பி முயன்ற நிலையில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம், அவர்களுடன் நீந்தி வந்த 10 பேரின் இருப்பை அறிய முடியாத நிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
17,000 தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில் போதுமான பாதுகாப்பு இல்லாமையல் படகு விபத்து வழக்கமான நிகழ்வாக தொடர்ந்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் மலேசியாவுக்கு 20 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்துச்சென்ற படகு சுமாத்ரா தீவு அருகே விபத்திற்குள்ளானதில் 10 பேர் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.