தாயை பிரிந்து சின்ன குட்டிகளாக கொண்டு வரப்பட்ட ரகு மற்றும் பொம்மி என்ற இரு யானைக்குட்டிகளை பழங்குடி தம்பதியரான பொம்மன் மற்றும் பெள்ளி எப்படி பராமரித்து வளர்த்தார்கள் என்பதை இந்த 47 நிமிட குறும் ஆவணப்படம் உலகிற்கு காட்டியுள்ளது. இதை இயக்கிய பெண் இயக்குனரான கர்த்திகி கான்சால்வெஸ் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
மலைவாழ் பழங்குடி தம்பதியரான பொம்மன், பெள்ளி முதுமலை சரணாலயத்தில் யானைகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது 2017ம் ஆண்டில் பிறந்ததுமே தாயை பிரிந்த குட்டியான ரகு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தங்களது குழந்தை போல பாவித்து அதன் குறும்புகளை பொறுத்து அதை அவர்கள் வளர்த்தனர். பின்னர் 2019ம் ஆண்டில் இதேபோல குட்டியாக பொம்மியும் அவர்களை வந்து சேர்ந்தது. இரு யானைக்குட்டிகளையும், இரு குழந்தைகளாகவே அவர்கள் பாவித்து வளர்த்த விதம் சுற்று இருந்தவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தங்கள் கதை குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பொம்மன், பெள்ளி தம்பதியர் “அன்று யானைக்குட்டிகளை எங்களிடம் கொடுத்திருக்காவிட்டால் இன்று எங்களுக்கு இந்த பெருமை கிடைத்திருக்காது. இந்த விருது கிடைத்ததில் ஒட்டுமொத்த முதுமலை முகாமிற்கே மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
ஒருமுறை தீ விபத்து ஒன்றில் தங்கள் பிள்ளை நெருப்பில் சிக்கி இறந்துவிட்டதாகவும், அப்போதும் யானைக்குட்டிகளை விட்டு செல்ல முடியாது என்பதால் அவற்றை பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் பகிர்ந்த வாழ்க்கை சம்பவங்கள் மனதை உருக செய்வதாக உள்ளன. யானைகள் மீது பிரியம் கொண்ட அந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.