ரொரன்றோவில் இரண்டு வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவனை அவசர சிகிச்சை மையம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் , சிகிச்சை பலனின்றி அந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
அவன், பக்கத்தில் இருக்கும் 14 மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்ததாக தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ள நிலையில், அவன் பால்கனியிலிருந்து விழுந்தானா அல்லது ஜன்னலிலிருந்து விழுந்தானா என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழே விழுந்த சிறுவன், எப்போது விழுந்தான், அவன் எவ்வளவு நேரமாக அங்கேயே விழுந்துகிடந்தான் என எந்த விவரமும் எதுவும் தற்போதைக்கு தெரியவில்லை.
இதேவேளை சிறுவனின் தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரியும் என்றும், அவரும் மகனுடன் மருத்துவமனையிலிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்திலுள்ள கட்டிடங்கள் எதிலாவது CCTV கமெராக்கள் இருக்குமா என தேடி வரும் பொலிசார், யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.