பல நாடுகளிருந்து ஆட்கடத்தல்களைத் கடத்தி அவுஸ்திரேலிய போன்ற பெரிய நாடுகளின் கடலின் கரையோரங்களில் விட்டு செல்கின்றார்கள். அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் தலைமையில், அவுஸ்திரேலியாவின் கடலோர பகுதியில் ஆட்கடத்தல் தடுப்பு முயற்சிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வியட்நாமில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிய படகுகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்ததை அடுத்து எல்லைப்பகுதி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வியட்நாமிலிருந்து பயணித்த 17 பேரும் கைது செய்யப்பட்டு மீண்டும் வியட்நாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவ்வாறான சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013 ஆம் ஆண்டில் பலத்த பாதுகாப்பு எல்லை கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.
இதன் பின்னர் , 33 சட்டவிரோத ஆட்கடத்தல் கப்பல்களில் பயணித்த 827 பேர் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு எல்லை கொள்கைகள் காரணமாக சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டதாகவும் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்கடத்தலை முறியடிப்பதற்கும், கடலில் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வான்வழிக் கண்காணிப்பு, நீர் வழி, கடற்பகுதி எல்லைப் பாதுகாப்பினையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணித்தவர்களில் 1200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.