வட காஸாவுக்கான உணவு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இது சாதாரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் உலக உணவுத் திட்டம் கூறியதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பகுதிக்குச் செல்லும் உதவிக் குழுக்கள், வன்முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உதவிக் குழுக்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு சூறையாடப்படுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வார இறுதி தொடங்கி, ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் 10 லொறிகளில் உணவுப் பொருள்களை அனுப்ப உலக உணவுத் திட்டம் தயாராக இருந்தது.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காஸா Wadi சோதனைச் சாவடியை உதவிக் குழு நெருங்கியபோது, பசியால் வாடிய மக்கள் அதனைச் சுற்றிவளைத்தனர். பலர் அந்த லொறி மீது ஏறுவதற்கு முயற்சி செய்தனர். பின்னர் லொறி காஸா நகருக்குள் நுழையும்போது துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டதாக BBC கூறியது.
இதற்கிடையில் தெற்கு நகரான கான் யூனிஸுக்கும் (Khan Younis) மத்திய நகரான Deir al-Balahவுக்கும் இடையே பயணம் செய்த சில லொறிகளில் இருந்து உதவிப் பொருள்கள் சூறையாடப்பட்டு, லொறி ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸாவில் என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் விரக்தியில் இருப்பதைக் காண முடிந்ததாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
வட காஸா, பட்டினியால் மோசமடைந்து வருவதாக கடந்த 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஐ.நா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.