இவர் குடிக்கும் தண்ணீர் பிரான்சிலிருந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். பிரான்ஸ் நாட்டில் உள்ள எவியன் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக இந்தியா வருகின்றன.
நாள் முழுக்க டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும், கொஞ்சமும் ஸ்டேமினா குறையாமல் களத்தில் நிற்பவர் விராட் கோலி. தன் உடல்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில் அவருக்கு எப்போதுமே தனி கவனம் உண்டு.
உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டு, எல்லோரையுமே ஆச்சர்யப்படுத்துவார்.
மற்ற இந்திய அல்லது உலக கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், இவரது உடற்தகுதி மேலோங்கிக் காணப்படுகிறது என்பதைப் பல உடற்தகுதி நிபுணர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆரோக்கியமான டயட் என்பதை உணவுகளில் மட்டுமன்றி, தான் குடிக்கும் நீரிலும் பின்பற்றுகிறார் விராட் கோலி.
இவர் குடிக்கும் தண்ணீர் பிரான்ஸிலிருந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். பிரான்ஸ் நாட்டில் உள்ள எவியன் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக இந்தியா வருகின்றன.
கோலி குடிப்பது அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் குடிப்பதைப் போன்ற தண்ணீர் இல்லை. இதன் விலை சுமார் 600 ரூபாய் (ஒரு லிட்டர்). கோலி ஒருவர்தான் இந்தத் தண்ணீரைக் குடிக்கிறாராம். விளையாடும்போது மட்டுமன்றி வெளியே எங்கே போனாலும் எவியன் தண்ணீர் பாட்டில் அவருடன் இருக்குமாம்.
இந்தக் குடிநீர் 330 மி.லிட்டர், 500 மி.லிட்டர், 750 மி.லிட்டர், 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என்கிற வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. அதேபோல் இதன் விலையும் அளவுகளுக்கு ஏற்ப வித்தியாசப்படுகிறது. அதில் கோலியின் சாய்ஸ் 600 ரூபாய்.
பொதுவாக நீரை ஃபில்ட்டர் செய்யும்போது அதில் இருக்கும் மினரல் சத்துகள் வடிகட்டப்படுகின்றன. இதனால் முழுமையான மினரல் சத்துகள் நமக்கு நீரில் இருந்து கிடைக்காமல் போகிறது.
ஆனால், எவியன் மினரல் வாட்டர் மிகுதியான மினரல் சத்துகள் இயற்கையான முறையில் ஃபில்ட்டர் செய்யப்பட்டு கிடைக்கிறது. அதனால்தான் இதன் விலையும் கூடுதலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எவியன் குடிநீர் அடைக்கப்படும் பாட்டில்களும் பிரத்தியேகமானவை மற்றும் விலையுயர்ந்தவை என்பதாலும் விலை அதிகமாக இருக்கிறது.
ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட்போன்களைப்போல, ஸ்பெஷல் எடிசன் வாட்டர் பாட்டில்களிலும் எவியன் நிறுவனம் குடிநீரை விற்பனை செய்கிறது. இந்த பாட்டில்களை உலகின் மிகப் பிரபலமான ஃபேஷன் டிசைனர்களில் ஒருவரான டயான் வொன் ஃப்ருஸ்டன்பெர்க் வடிவமைத்திருக்கிறார்.
பனிகள் படர்ந்த மலைகளில் உற்பத்தியாகும் நீர், இயற்கையான முறையில் ஃபில்ட்டர் ஆகி கிடைக்கிறது. அதைத்தான் எவியன் நிறுவனம் குடிநீராக வர்த்தகப்படுத்துகிறார்கள். பிரான்ஸ் மெடிக்கல் அகாடமி 1878-ம் ஆண்டிலேயே இந்த நீரின் தரத்தைப் பரிசோதித்துத் தரச்சான்றிதழை வழங்கியிருக்கிறது.
ஒரு லிட்டர் தண்ணீரில் நடுநிலையான சமச்சீர் pH – 7.2, கால்சியல் – 80 மி.கிராம், குளோரைடு – 10 மி.கிராம், மக்னீசியம் – 26 மி.கிராம், பொட்டாசியம் – 1 மி.கிராம், சோடியம் – 6.5 மி.கிராம் ஆகியவை இயற்கையாகவே இருக்கின்றன.
விராட் கோலி குடிப்பதால் மட்டுமல்ல, இதிலுள்ள இயற்கை குணநலன்கள் அதிகம் இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கும் தடகள வீரர்களுக்கும் உடல்நல ஆலோசனையாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நன்றி -செ.கார்த்திகேயன்.