தாயின் தவறான பழக்கத்தைக் கண்டித்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் நெடுமங்காடு தெக்கும்கரையைச் சேர்ந்தவர் மஞ்சுஷா(34). இவருக்கு ப்ளஸ் ஒன் படிக்கும் மீரா (16) என்ற மகள் இருந்தார். மஞ்சுஷாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் (29) என்பவருக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது.
மஞ்சுஷாவும், அனீஷும் வீட்டில் தனியாக இருப்பதை மீரா பார்த்துள்ளார். இந்தத் தவறான நட்பைக் கைவிடுமாறு தாயிடம் மீரா வலியுறுத்தியுள்ளார்.
இதனால் பெற்ற மகள் என்றும் பாராமல் மீராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் மஞ்சுஷா. பின்னர் அனீஷுடன் சேர்ந்து மீராவின் உடலை பாழும் கிணற்றில் வீசியுள்ளார்.
உறவினர்களிடம் தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டாள், அவளைத்தேடி நான் போகிறேன் என்று புதுக் கதை விட்டார் மஞ்சுஷா. மகளைத் தேடிப்போவதாக சொன்ன மஞ்சுஷா பல நாள்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சுஷாவின் தாய் வல்சலா நெடுமங்காடு போலீஸில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில் அனீஷும் மாயமானது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டையில் நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மஞ்சுஷா- அனீஷ் ஆகியோரை கேரள போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் மீராவின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஞ்சுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். பெற்ற மகளையை தாய் கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி – சிந்து ஆர்