கோவையின் முக்கியமான பண்பாட்டுத் திருவிழாவான கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 5-ம் ஆண்டாக துவஙியது. கோவை கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும், பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 2019 ஜூலை 19 வெள்ளி மாலை துவங்கியது. புத்தகத் திருவிழாவினை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவங்கி வைத்தார். ஜூலை 19 முதல் 28 வரை கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது.
விழாவினை துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார் கு.ராசாமணி. ‘’இன்றைய இளைய தலைமுறையினரின் மத்தியில் உள்ள பகைமை, ஏற்றத் தாழ்வுகள் கவலை கொள்ளச் செய்கிறது. அவர்களை ஆக்கப்பூர்வமாக மாற்ற புத்தகத் திருவிழாக்கள் அவசியமாகின்றது.. பள்ளிக், கல்லூரி மாணவர்களிடையே வாசிப்புக் பழக்கத்தை அனைத்து ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவரும் சமூக முன்னேற்றத்திற்காகவும், அக்கறையுடன் செயல்படுபவர்கள். அவர்களைப் நாம் போற்ற வேண்டும். என் இளமைக் காலத்தில் வாசிப்புப் பழக்கத்தினை என் தந்தை ஊக்குவித்தார். காந்தியம், மார்சியம், ஆன்மீகம் என அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்தார். அது என் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக மாற்றியது.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. தொழிலகம் தோறும் நூலகம் மூலமாக தொழிலாளர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் வரவேற்புக்குரியது என்று சிறப்புரை வழங்கினார்.
நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய கொடீசியா அமைப்பின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, ‘’சமூக முன்னேற்றத்திற்காக தன் பங்களிப்பாக கொடீசியா இந்த கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்துகின்றது. புத்தகங்கள், மனங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் அனைவரும் புத்தக வாசகர்கள். அடுத்த தலைமுறையினரையும் ஆக்கபூர்வமான தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புத்தகத் திருவிழாவினை நடத்துகின்றோம். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த புத்தகங்கள் கண்காட்சியில் கிடைக்கும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்து உள்ளனர். இலக்கிய நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்,என பல நிகழ்வுகள் பத்து நாட்களும் நடைபெறவுள்ளன என்று பேசினார்.
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் தலைவர் விஜய் ஆனந்த் பேசுகையில், ‘’இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் வண்ண நிலவனுக்கு வழங்கப்படுகிறது. மற்றும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புனைவு, அபுனைவு, கவிதை பிரிவுகளில் எழுத்தாளர்கள் குணா கந்தசாமி, சோலை மாயவன், ஞா.குருசாமி ஆகியோருக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது. கொடீசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் 3600 பேர் பங்கெடுத்துள்ளனர். அவர்களில் ஆயிரம் பேருக்கு நாளை சனிக்கிழமை ஜூலை 20 அன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
150 பதிப்பகங்கள், 250 விற்பனையகங்களில் பங்கெடுக்கின்றனர். அனுமதி இலவசம். மக்களுக்கு வசதியாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவினாசி சாலையில் இருந்து கொடீசியா வரை வந்து செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஜூலை 19 முதல் 28 வரை அவினாசி சாலை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் ஜென்னிஸ் வழியாக கொடீசியா வரை வந்து செல்லும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இலக்கியக் கூடல் தலைவர் டி.பாலசுந்தரம், அறிவுக்கேணி தலைவர் இ.கே.பொண்ணுசாமி, செயலாளர் தேவராஜன், கோயம்புத்தூர் புத்தக் கண்காட்சி அமைப்பாளர்கள், கொடீசியா உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.