பரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் சிறையிவுள்ள முருகனை சந்தித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நளினி, முருகன் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து, இருவரும் மிகவும் உருக்கமாக கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து வேலூர் சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார்.
தினமும் அவர், சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். மேலும் சிறையில் இருக்கும்போது 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம்.
ஆனால் இப்போது பரோலில் வெளியே வந்து இருப்பதால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி நளினி- முருகன் சந்திப்பை பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தனது மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியுள்ளது. ஆகையால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மனுவொன்றை சிறை உயர் அதிகாரிகளுக்கு நளினி அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே நளினி, முருகன் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.