சென்னை கொட்டிவாக்கத்தில் சொந்த வீட்டில் குடியிருந்த ஐஐடி பேராசிரியர், அவரின் மனைவி ஆகியோர் கவனிக்க யாரும் இல்லாததால் துயரத்துடன் வாழ்ந்த வாழ்க்கை பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்தச் சமயத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் ராஜகோபாலும் கல்யாணியும் பேசுவதில்லை. முதுமை காரணமாக கல்யாணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சூழலில் ராஜகோபாலும் இல்லை. இதனால் கடந்த ஓராண்டாக கல்யாணி படுத்தபடுக்கையாகி இருந்தார். அவரின் அருகிலேயே ராஜகோபாலும் இருந்து காலத்தைக் கடத்தினார். எப்போதாவது ராஜகோபாலின் வீடு திறந்திருக்கும். மற்றபடி வீட்டில் ஒரே ஒரு மின்விளக்கைத் தவிர அவர்களின் வாழ்க்கையைப் போல இருட்டாகவே அந்த வீடும் இருந்துள்ளது.
நேற்று அவசர அவசரமாக ராஜகோபால், பக்கத்து வீட்டுக்குச் சென்றார். அவர்களிடம், `என் மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ராஜகோபால் வீட்டுக்குள் முதல் முறையாகச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் மற்றும் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றமும் வேதனையடைய வைத்தது. எலும்பும் தோலுமாகக் காணப்பட்ட கல்யாணியைச் சுற்றி சேலைகள் கிடந்தன.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸிக்கும் நீலாங்கரை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸாரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு ராஜகோபால் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸார் திரும்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், உறவுகள் என்ற அறக்கட்டளையின் நிறுவனர் காலித் அகமதுவுக்கு தகவல் தெரிவித்தார்.
காலித் அகமது மற்றும் உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு ராஜகோபால் வீட்டுக்குச் சென்றனர். நீண்டநேரம் ராஜகோபாலிடம் பேசிய உறவுகள் அறக்கட்டளையினர் கல்யாணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதம் பெற்றனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கல்யாணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கல்யாணியின் உடலில் இடதுபுறம் முழுவதும் அழுகிய நிலையில் புழுக்கள் இருந்தன. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.
மருத்துவமனையில் கல்யாணி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கல்யாணியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு கல்யாணியின் சடலம் ராஜகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களே ராஜகோபாலுக்கு உடன்இருந்து கல்யாணியின் சடலத்தை தகனம் செய்ய உதவினர்.
இதுகுறித்து ராஜகோபாலின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, “ராஜகோபால் மற்றும் கல்யாணி ஆகியோர் இந்த வீட்டுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் குடிவந்தனர். ஆனால் யாரிடமும் பேச மாட்டார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து சிரித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். உறவினர்கள் என யாரும் வரமாட்டார்கள். கடந்த ஓராண்டாக ராஜகோபால் மட்டும் வெளியில் வருவார். பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வார். ராஜகோபாலின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசும். ஆனால் அதைக்கூட அவர்களிடம் சொல்ல முடியவில்லை. ஜன்னல்களும் கதவுகளும் எப்போதும் பூட்டியே இருக்கும்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் அவர் எங்களிடம் மனைவி உடல் நலம் சரியில்லாமல் உயிருக்குப் போராடுவதாகக் கூறி உதவி கேட்டார். உடனே நாங்கள் வீட்டுக்குள் சென்றோம். அப்போது படுத்த படுக்கையாக கல்யாணி இருந்தார். அவரைச் சுற்றி மலம், சிறுநீர் தேங்கியிருந்தது. மேலும், ஒரே இடத்தில் படுத்திருந்ததால் அவரின் உடலில் சில பாகங்கள் அழுகி காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அந்த வீட்டில் ராஜகோபால் எப்படி வசித்தார் என்று தெரியவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டாலும் ராஜகோபாலிடமிருந்து சரியான பதில் இல்லை” என்றனர் வேதனையுடன்.
முதுமைகாலத்தில் கவனிக்க யாரும் இல்லாத இந்தத் தம்பதி, இப்படியொரு வேதனை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.
நன்றி: விகடன்